தமிழ்நாட்டில் கரோனாத் தொற்றின் இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வருகிறது. இதனைத் தடுப்பதற்காக தற்போழுது இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. ஆனாலும் கரோனா தொற்றின் பரவும் வேகம் அதிகரித்தே வருகிறது.
தற்போது நோய்த்தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 1.25 லட்சத்தை தொட்டுவிட்டது. தமிழ்நாட்டில் 23க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நோய்த்தொற்று உறுதியாகும் எண்ணிக்கை நாளொன்றுக்கு 10 விழுக்காட்டிற்கும் மேல் அதிகரித்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.
இதனையடுத்து தமிழ்நாட்டில் கரோனா தொற்றைகட்டுப்படுத்துவதற்கு மேலும் பல புதிய கட்டுப்பாடுகளை அரசு நாளை (மே 6) முதல் கொண்டு வருகிறது. இந்த நிலையில் நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் தமிழ்நாட்டில் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், " நாளுக்கு நாள் பெருகிவரும் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த, முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும். மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு தேவையான உபகரணங்கள் இல்லை என்று வெளியாகும் செய்தி வேதனையளிக்கிறது.
கரோனாவிற்கு போதிய சிகிச்சையின்றி நாள்தோறும் பல உயிர்கள் உயிரிழப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் உடனடியாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, ஆங்காங்கே முகாம்கள் அமைத்து,18 வயதிலிருந்து அனைவருக்குமே தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.