பள்ளிக்கரணையில் நேற்று வைக்கப்பட்டிருந்த அ.தி.மு.க. பேனர் விழுந்ததில் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த குரோம்பேட்டையைச் சேர்ந்த சுபஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கண்டனங்களை பதிவுசெய்து வருகின்றனர்.
அந்த வகையில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தனது முகநூல் பக்கத்தில், "தமிழ்நாட்டில் பேனர் வைக்கும் வழக்கம் பல ஆண்டுகளாக தொடர்ந்துவருகிறது. அந்த வகையில் திமுக, அதிமுக கட்சிகள் இதை ஒரு கலாசாரமாகவே வளர்த்துவிட்டார்கள். அதன் பிறகு அனைத்து கட்சிகளும் தங்கள் கட்சி மற்றும் குடும்ப விழாக்களுக்கு பேனர் வைப்பது வழக்கமானது. பின் தனி நபர்களும், பொதுமக்களும் தங்கள் வீட்டு விஷேசங்களுக்கு பேனர் வைக்கும் வழக்கம் தமிழ்நாட்டில் தொடங்கியது.
பேனர் வைப்பதற்கு தடை செய்ய வேண்டும், என்று முடிவெடுத்தால் அனைத்து தரப்பினரும் அதை ஆமோதித்து தடை செய்ய வேண்டும். ஆனால் நேற்று சென்னை, பள்ளிக்கரணையில் மாணவி சுபஸ்ரீ உயிரிழந்த துயரச்சம்பவத்திற்கு பிறகு, அதுகுறித்து பேசுவதும், பேனர் வைப்பதை தடை செய்ய வேண்டும் என்று விவாதிப்பதும், சிறிது நாட்களுக்கு பிறகு, இச்சம்பவத்தை மறந்து விட்டு மீண்டும் பேனர்கள் வைப்பதும், ஏற்புடையதல்ல.
பேனர் வைக்கக் கூடாது என்றால் அனைத்து கட்சிகளும், பொதுமக்களும் பேனர் வைப்பதை தவிர்க்க வேண்டும். மாணவி சுபஸ்ரீயின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். பேனர் வைக்கலாமா? வேண்டாமா? என்பதை நீதிமன்றமும், நீதியரசர்களும் முடிவெடுத்து ஆணையை பிறப்பிக்க வேண்டும். அதை தேமுதிக நிச்சயம் வரவேற்கும்" என்று கூறியுள்ளார்.