சென்னை:தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் கரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை(டிச.28) உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, தெலங்கானா ஆளுநர் தமிழிசை உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி:விஜயகாந்த் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. தமிழ் திரையுலகின் ஜாம்பவான், அவரது நடிப்பு பல லட்சம் மக்களின் இதயங்களைக் கவர்ந்தது. ஒரு அரசியல் தலைவராக, தமிழ்நாட்டின் அரசியல் நிலப்பரப்பில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்திய அவர், பொதுச்சேவையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அவரது மறைவு ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்து இருக்கிறது, அதை நிரப்ப கடினம் என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தெலங்கானா ஆளுநர் தமிழிசை:"உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர், சகோதரர் கேப்டன் விஜயகாந்த் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் மனவேதனை அடைந்தேன். நல்ல திரைப் படக்கலைஞர். நல்ல அரசியல் தலைவர். நல்ல மனிதர், நல்ல சகோதரர், ஒட்டுமொத்தமாக ஒரு நல்லவரை நாம் இழந்து இருக்கிறோம் என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி:தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், அன்பு சகோதரருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். பொதுவாழ்விலும், கலைத்துறையிலும் செயற்கரிய பல செயல்கள் செய்துள்ள, மக்களால் அன்போடு கேப்டன் என்று அழைக்கப்படும் விஜயகாந்த் அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.