சென்னை: திமுக அரசுக்கு எதிராகவும், பாஜகவின் வளர்ச்சிக்காகவும் நாளை மறுநாள்(ஜூலை28) ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் இருந்து சென்னையை நோக்கி 'என் மண்... என் மக்கள்' என்ற தலைப்பில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பாத யாத்திரை மேற்கொள்கிறார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்கும் இந்த பாதயாத்திரை தொடக்க விழாவிற்கு தமிழ்நாட்டில் உள்ள கூட்டணிக் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அதிமுக, பாமக, தமாகா, புதிய நீதி கட்சி, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுக்கு பாஜக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று (ஜூலை26) பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன், சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டிற்கு நேரடியாக சென்று பாதயாத்திரை தொடக்க விழாவிற்கு அழைப்பு விடுத்துள்ளார். கடந்த ஜூலை 18ஆம் தேதி நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கு தேமுதிகவிற்கு அழைப்பு விடுக்கவில்லை.
இதுகுறித்து நேற்று முன்தினம்(ஜூலை 24) மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் பதிலளித்த தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா, ''தேமுதிகவிற்கு தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கவில்லை. தற்போது தேமுதிக எந்த கூட்டணியிலும் இல்லை'' எனக் கூறியிருந்தார்.