சென்னை: கோயம்பேட்டில் தேமுதிக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதன் பின் பொருளாளர் பிரேமலதா வியஜகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பிப்.12 நடைபெற உள்ள கழகத்தின் கொடிநாள், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு போன்றவை குறித்து அனைத்து மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசிக்கப்பட்டது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் தேமுதிக நிலைப்பாடு என்ன என்று நீங்கள் எதிர்பார்த்திருப்பீர்கள். உங்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சியளிக்கக் கூடிய வகையில் தேமுதிக ஈரோடு கிழக்கு தொகுதியில் தனித்து களம் காண்கிறது. கேப்டனின் ஆசிபெற்ற ஈரோடு கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆனந்தன் அவர்களை வேட்பாளராக அறிவித்திருக்கிறோம். ஜன., 31ல் இருந்து வேட்புமனு தாக்கல் செய்யப்படுகிறது. தேமுதிக எப்போது வேட்பு மனுத் தாக்கல் செய்கிறோம் என்பதைப் பின்னர் அறிவிப்போம். அனைவரும் ஒற்றுமையாகச் செயல்பட்டு கழகத்தின் மாபெரும் வெற்றிக்காக உழைப்போம்.
தேமுதிக ஆரம்பித்ததிலிருந்து அனைத்து இடைத்தேர்தல்களிலும் போட்டியிட்டு இருக்கிறோம். கூட்டணிக்குள் வந்த பின் கூட்டணிக்காக சில இடங்களில் விட்டுக் கொடுத்துள்ளோம். ஆனால் இன்றைய நிலையில் தேமுதிக யாருடனும் கூட்டணியில் இல்லை. ஈரோடு கிழக்கு தொகுதி ஏற்கனவே தேமுதிக வென்ற தொகுதி. 2011 ல் எங்களுடைய தொகுதி அது.