அமெரிக்காவில் மனிதநேய சாதனையாளர் விருது பெற்ற திரவிடர் கழகத் தலைவர் கி. வீரமணிக்கு பெரியார் திடலில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கி. வீரமணி, "பெரியாரினுடைய கருத்துகள் பல்வேறு திசைகளில் பரப்பவும், அதற்கான தேவையும் ஏற்படுகிறது. பெரியாரின் கொள்கைகளை அமெரிக்காவிற்கும் கொண்டுசெல்ல வேண்டிய அவசிம் இருக்கிறது. இந்தியாவில்தான் சாதி இருக்கு என்று கூறுகிறார்கள். கடவுள் மறுப்பாளன், பார்ப்பன எதிர்ப்பாளர் என்று இரண்டு விஷயங்களுக்குள் அடைக்கலாம் என்று பார்க்கின்றனர்.
அமெரிக்காவிற்குப் பெரியார் தேவை ஆனால் அவருடைய இலக்கு சமத்துவம், சுயமரியாதை, தன்மானம், எல்லோருக்கும் கல்வி, பெண் அடிமை நீக்கம், சமூக நீதி என இது அத்தனையும் எதிர்த்து ஐந்து துறைகளில் அவர் போராடினார்.
அமெரிக்காவிலும் சாதியை தேடும் தமிழனா?
இங்கிருந்து புலம்பெயர்ந்து சென்றவர்கள் அமெரிக்காவில் நிறைய பேர் இருக்கின்றனர். நம்முடைய நல்ல தத்துவங்கள், பண்பாட்டு படையெடுப்புக்கு முன்னர் இருந்த நல்ல சுயமரியாதை தத்துவங்களை விட்டுவிட்டு அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் சாதியை தேடிக்கொண்டிருக்கின்றனர். அதுதான் வேடிக்கையாக உள்ளது. எனவேதான் அங்கிருப்பவர்கள் பெரியாரும் அம்பேத்கரும் உங்களுக்கு தேவைப்படுவதைவிட எங்களுக்கு தேவைப்படுகிறார்கள் என்று கூறுகிறார்கள்.
அமெரிக்காவில் சாதியா? நூல் தமிழாக்கம்
அமெரிக்காவில் கறுப்பு இனம் என்கிற பாகுபாட்டை ஒழித்து இடஒதுக்கீடு சட்டம் இருக்கிறது. ஆனால், இங்கிருந்து போக்கக்கூடியவர்கள் சாதியைக் கொண்டுசெல்கின்றனர். அம்பேத்கருடைய அமைப்பு அமெரிக்காவில் சாதி (Caste in the United States) என்ற ஆய்வு நூலை வெளியிட்டுள்ளனர். இது மிகப்பெரிய ஆய்வு நூல். இதை பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் 'அமெரிக்காவில் சாதியா' என்ற தலைப்பில் மொழிப்பெயர்க்க உள்ளது.
அமெரிக்காவில் சாதி வந்துவிட்டது என்றால் நோய் வந்துவிட்டது என்றுதான் அர்த்தம். எனவே அதைத் தீர்க்க பெரியார் வேண்டும். அடுத்த மாநாடு தென்னாப்பிரிக்காவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பெரியாரிய சிந்தனைகள் உலகளவில் மானிடம் பரவக்கூடிய அளவுக்கு வளர்ந்திருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு கூறிக் கொள்கிறேன்.
அதுதான் என்னுடைய பயணம். அது முழுக்க முழுக்க வெற்றிபெற்றுள்ளது. பெரியார் உலகமயமாகிக் கொண்டிருக்கிறார் என்பதுதான் சிறப்பு" என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.