சென்னை:தீபாவளிப் பண்டிகையை ஒட்டி, ஆவின் நிறுவனம் சார்பில் இனிப்பு வகை மற்றும் கார வகைகள் விற்பனை செய்வதற்கான அதன் தயாரிப்புப் பணிகள் தீவிமடைந்துள்ளன. இதுதொடர்பாக, அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் நடக்கும் பணிகளை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச்சந்தித்த அமைச்சர் நாசர், 'கடந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகைக்கு 85 கோடி ரூபாய்க்கு ஆவின் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன. இந்த ஆண்டு புதிதாக 11 வகை இனிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டு, 250 கோடி ரூபாய் இலக்கு வைத்து, சுமார் 3,200 டன் இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
ஆர்டர் அதிகரிக்கும் பட்சத்தில் தயாரிப்புகள் அதிகரிக்கக்கூடும். போக்குவரத்துத்துறையில் இருந்து மட்டும் 70 டன் இனிப்புகள் ஆர்டர் வந்துள்ளன. மற்ற அரசுத்துறையில் இருந்தும் ஆர்டர் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கறந்த பால் கறந்த படியே சுத்தமான நெய் கொண்டும், எந்தவித கலப்பிடமும் இல்லாமல் சுத்தமானதாக தயாராகின்றன, இந்த ஆவின் இனிப்புகள். இதனால் ஆவின் பொருட்கள் உலகத்தரம் வாய்ந்தது. எந்தவொரு விளம்பரமும் இல்லாமல் மக்கள் விரும்பும் உணவாக ஆவின் மாறியுள்ளது. ஆவின் உப பொருட்கள் சிங்கப்பூர், மலேசியா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் செய்தியாளர் சந்திப்பு அதேபோல் எந்த ஆண்டும் இல்லாத வகையில், ஆயுத பூஜைக்கு இந்த ஆண்டு 30 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டிருப்பது ஒரு சாதனை. கடந்த அதிமுக ஆட்சியில் செம்பரம்பாக்கம் ஏரி திறப்பின்போது, ஒரு பால் பாக்கெட் 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது எந்தவொரு பேரிடர் வந்தாலும், ஆவின் பால் தங்கு தடையின்றி மக்களுக்குக் கொண்டு செல்ல அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:ஆவின் பாலில் ஈ... வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி