தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் இன்று பட்டாசு விற்பனை தொடங்கியது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த. வெள்ளையன், திரைப்பட நடிகர் ஆரவ் ஆகிய இருவரும் இணைந்து விற்பனையைத் தொடங்கி வைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு பட்டாசு விற்பனையாளர்கள், ''மழை மற்றும் ஆர்வம் குறைவு காரணமாக இந்தாண்டு பட்டாசு விற்பனை மந்த நிலையில் உள்ளது. காலை 8 மணி முதல் இரவு 11.30 மணி வரை பட்டாசு விற்பனை நடைபெறும். தீபாவளிக்கு முந்தைய நாளான 26ஆம் தேதி 24 மணி நேரமும் பட்டாசு விற்பனை நடைபெறும். வரும் 28ஆம் தேதி வரையிலும் பட்டாசு விற்பனை தொடர்ந்து நடைபெறும்.
பசுமை பட்டாசு தொடர்பான அறிவிப்பு தாமதமாக வந்ததால் இந்தாண்டு சாதாரண பட்டாசுகளோடு பசுமை பட்டாசுகளும் சேர்த்தே விற்பனை செய்யப்படும். கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் பட்டாசுகளின் விலை ஐந்து விழுக்காடு வரை உயர்ந்துள்ளது. சீனப் பட்டாசுகள் விற்பனை இங்கு நடைபெறாது” எனத் தெரிவித்தனர்.