சென்னை: தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் பாரம்பரிய மற்றும் கலாச்சார முறைகளில் தீபாவளி கொண்டாட்டம் களைகட்டி வருகிறது.
தமிழகத்தில் களைகட்டிய தீபாவளி கொண்டாட்டம்:தீபாவளி நாளில் காலை 6 மணியில் இருந்து 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதனால் மக்கள் காலையில் எழுந்து, புத்தாடைகளை உடுத்திக் கொண்டு, தீபாவளிக்குப் பட்டாசுகளை வெடிக்கத் தொடங்கினார்கள்.
வெறிச்சோடிய சாலைகள்:தீபாவளி பண்டிகை என்பதால் சென்னையில் இருந்து 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அவரவர் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர். இதனால் சிங்கார சென்னையின் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
கோயில்களில் சிறப்பு வழிபாடு:தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகத்தில் பிரசித்திபெற்ற கோயில்களான சிதம்பரம் நடராஜர் கோயில், பழனி முருகன், மயிலை கபாலீசுவரர், தஞ்சை பெரிய கோயில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், காஞ்சி ஏகாம்பரஸ்வரர் கோயில், திருச்சி திருவானைக்காவல் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், ஸ்ரீரங்கம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. மேலும், திரளான பொதுமக்கள் கோயில்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
தயார் நிலையில் தீயணைப்பு வீரர்கள்:தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறக் கூடாது என்பதற்காக அனைத்து நிலையங்களிலும் உள்ள தீயைனைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். இதே போல் கே.எம்.சி. மருத்துவமனையில், தீ காயங்களுக்கான சிறப்புப் பிரிவும் தயார் நிலையில் உள்ளன.
தீபாவளியன்று வர்த்தகம்: தீபாவளியையொட்டி ஆன்லைன் வணிகமும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 15 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. காற்று மாசுபாடு குறித்த பல்வேறு கட்டுப்பாடுகளால் பட்டாசு விற்பனை மட்டும் சரிவைச் சந்தித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதையும் படிங்க: தீபாவளி பண்டிகை; ஆரவாரமின்றி பொதுமக்களை வழியனுப்பிய கோயம்பேடு பேருந்து நிலையம்..