நோயாளிகளை ஏமாற்றாதீர்கள்: மருந்துக் கடைகளுக்கு திவ்யா சத்யராஜ் வேண்டுகோள்! சென்னை: நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் ஊட்டச்சத்து மருத்துவராக உள்ளார். இந்நிலையில் அவர் இன்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.
அவர் பதிவிட்டுள்ள வீடியோவில், 'ஒரு முக்கியமான விஷயம் சொல்வதற்காகத்தான் இந்த வீடியோ பதிவு. என்னுடைய நோயாளி ஒருவர் மருந்து வாங்க மருந்துக்கடைக்குச் சென்றுள்ளார். அவர் வாங்கிய 4 மருந்துகளில் 3 மருந்துகள் காலாவதியான நிலையில் இருந்தது. காலாவதியான மருந்துகளைப் பயன்படுத்துவதால் பல உடல் உபாதைகள் வரலாம்.
இது முதல் தடவையல்ல பலமுறை பல மருந்துகடைகளில் நடந்துள்ளது. மக்கள் எல்லோரும், இனி நீங்கள் வாங்கும் மருந்துகளுக்கும், மளிகைப் பொருட்களுக்கும் காலாவதி தேதி பரிசோதித்து வாங்குங்கள். குறிப்பாக குழந்தைகளுக்கு வாங்கும் ஊசி, மருந்துகள், பால் பவுடர் உள்ளிட்டவை எது வாங்கினாலும் காலாவதி தேதி பார்த்து வாங்குவது மிகவும் முக்கியம்.
சமுதாயத்தில் எந்த துறையிலும் தவறு நடக்கக் கூடாது. ஆனால், மருத்துவத்துறையில் தவறு நடந்தால் அது மனிதனின் உடல்நலத்திற்கும், உயிருக்கும் ஆபத்து. மருந்துக் கடைகள் வைத்திருப்பவர்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள். மக்கள் எல்லோரும் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில்தான் மருந்து வாங்குகிறார்கள். வாங்கும் மருந்து, தங்களை குணப்படுத்தும் என்ற நம்பிக்கையில்தான் வாங்குகிறார்கள்.
பணம் சம்பாதிக்க மக்களின் அறியாமையை பயன்படுத்துவது மனிதநேயமற்ற செயல். பணத்தை விட மனிதநேயம் தான்முக்கியம். உங்கள் கடைகளில் காலாவதி ஆன மருந்துகளை அப்புறப்படுத்த ஒரு சிஸ்டம் அமைக்க வேண்டும். நோயாளிகளை சுரண்டுவதை நிறுத்துங்கள்’ என்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.