சென்னை: 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்கள் திருடப்படுவதாகச் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் ஆடியோ ஒன்று வெளியானது. அதில் 10 மற்றும் 12ஆம் வகுப்புத் தேர்வு எழுதும் மாணவர்களின் செல்போன் மற்றும் சுய விவரங்கள் திருடப்பட்டு, உயர் கல்வி நிறுவனங்களுக்கு 3000 முதல் 5000 ரூபாய் பேரம் பேசி ஒரு கும்பல் விற்பனை செய்யப்படுவது போல் ஆடியோவில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது.
குறிப்பாகப் பள்ளி மாணவர்களின் விவரங்களைச் சேகரிப்பதற்காக பிரத்தியேகமாகப் பள்ளிக்கல்வித் துறையில் ஒரு பிரிவு செயல்பட்டு வரும் நிலையில், மாணவர்களின் விவரங்கள் கசியப்படுவது குறித்துப் பல தரப்பிடமிருந்து விமர்சனங்கள் கிளம்பியது. இந்த நிலையில் மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை அதிகாரி புண்ணியக்கோடி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், சமீபத்தில் பள்ளி மாணவர்களின் தனிப்பட்ட விவரங்களைத் திருடி உயர் கல்வி நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் ஒரு கும்பல் தொடர்பான ஆடியோ செய்தி சேனலில் வைரலானது. பள்ளி மாணவர்களின் தனிப்பட்ட விவரங்களை அத்துமீறித் திருடுவது குற்றம் எனவும் இது போன்ற குற்றங்களில் ஈடுபடும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த புகார் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக மாணவர்களின் விவரங்களைச் சேகரித்து வைத்திருக்கும் செயலியை ஹேக் செய்து விவரங்களைக் கும்பல் திருடி உள்ளனரா அல்லது விவரங்களைச் சேகரித்து வைக்கும் பிரிவில் பணிபுரியும் ஊழியர் மூலமாகக் கசிந்துள்ளதா என்ற பல கோணங்களில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது தொடர்பாக ஊழியர்களை அழைத்து விசாரணை நடத்தவும் சைபர் கிரைம் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ரூ.500 கட்டினால் ரூ.2000-க்கு பொருட்கள்.. 8 லட்சம் அபேஸ் செய்த காங்கிரஸ் நிர்வாகி கைது!