தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சீமை கருவேல மரங்களை அகற்றம்... மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு... - நாட்டு மரங்களை நட வேண்டும்

சீமை கருவேல மரங்களை அகற்ற அனைத்து பஞ்சாயத்துகளுக்கும் அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சீமை கருவேல மரங்களை அகற்ற மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்த வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம்
சீமை கருவேல மரங்களை அகற்ற மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்த வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம்

By

Published : Sep 26, 2022, 9:25 PM IST

சென்னை:தமிழ்நாடு முழுவதும் சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்குகளை, வன பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி, தலைமை நீதிபதி தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய முழு அமர்வு உத்தரவு பிறப்பித்திருந்தது.

அதன்படி, இந்த வழக்குகள் நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது, சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் குறித்து, வனத்துறை, நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறைகளின் சார்பில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. வனத்துறை தாக்கல் செய்த அறிக்கையில், முதுமலை, ஆனைமலை வனப்பகுதிகளில் 200 ஹெக்டேர் பரப்பில் வளர்ந்திருந்த சீமை கருவேலமரங்கள் முழுமையாக அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

நீர்வளத்துறை தாக்கல் செய்த அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் 1.93 லட்சம் ஹெக்டேர் பரப்பு நீர் நிலைகளில் சீமைக் கருவேல மரங்கள் வளர்ந்திருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 70 ஆயிரத்து 294 ஹெக்டேர் பரப்பில் இருந்த சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவற்றை படிப்படியாக அகற்ற டெண்டர் கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரக வளர்ச்சித் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், கிராமப்புறங்களில் 2,700 ஹெக்டேர் பரப்பில் இருந்த சீமைக்கருவேல மரங்கள் 4 கோடியே 74 லட்சம் ரூபாய் செலவில் அகற்றப்பட்டு, ஏலம் மூலம் விற்கப்பட்டதாகவும், மேலும், 168 ஹெக்டேர் பரப்பில் நாட்டு மரங்கள் நடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கைகளை பதிவு செய்த நீதிபதிகள், வனத்துறை மற்ற வனப்பகுதிகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றவும், அதுகுறித்த அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர். நீர்நிலைகளில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை படிப்படியாக அல்லாமல் மொத்தமாக அகற்ற வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், இதுதொடர்பான டெண்டர் நடைமுறைகளை மூன்று மாதங்களில் முடிக்க வேண்டும் எனவும், அடுத்த விசாரணையின் போது இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

மேலும், சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என தமிழ்நாடு முழுவதும் உள்ள பஞ்சாயத்துகளுக்கும் அறிவுறுத்த, அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த பணிகளின் முன்னேற்றம் குறித்து மாதந்தோறும் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.

அகற்றப்பட்ட சீமைக் கருவேல மரங்களை ஏலம் மூலம் விற்க பஞ்சாயத்துகளுக்கு அனுமதி வழங்கவும், சீமைக் கருவேல மரங்களை அகற்றிய பின் அந்த இடங்களில் நாட்டு மரங்களை நட வேண்டும் எனவும் உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நவம்பர் 2ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: ஜெயலலிதா இருந்திருந்தால் குண்டர் சட்டம் பாய்ந்திருக்கும் - ஆ.ராசா பேச்சு குறித்து ஜெயக்குமார் காட்டம்

ABOUT THE AUTHOR

...view details