சென்னை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6, 9ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறவுள்ளது.
இதற்காக தேர்தல் பறக்கும் படைகளை அமைக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் பறக்கும் படையினர் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
விதிமுறைகள்
அதில், "ஒன்று முதல் மூன்று வரை உள்ள ஊராட்சி ஒன்றியங்களுக்கு, ஒரு செயற் குற்றவியல் நீதிபதி, மூன்று காவலர்கள் கொண்ட பறக்கும் படைகளை மாவட்ட ஆட்சியர்கள் அமைத்தல் வேண்டும்.
இப்பறக்கும்படைகள் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ள வரை 24 மணி நேரமும் இயங்க வேண்டும். எட்டு மணி நேரத்திற்கு ஒரு முறை மாற்றுப்பணி (shift) என்று இயங்கக்கூடிய வகையில் அமைத்திட வேண்டும். விதி மீறல்கள் தொடர்பான புகார்களின் மீது முழுக்கவனம் செலுத்துவது பறக்கும் படைகளின் கடமையாகும்.
வேட்பாளரோ அல்லது அவரது முகவரோ தகுதியான ஆவணங்கள் இல்லாமல் 50 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் பணம், 10 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் அன்பளிப்புப் பொருள்கள் உள்ளிட்டவற்றை எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்தல் வேண்டும்.
பறக்கும் படைகளின் ஆய்வு மற்றும் பறிமுதல் செய்யும் நிகழ்வுகள் அனைத்தும் வீடியோ குழுவினரால் பதிவு செய்திட வேண்டும்.
பறிமுதல் செய்யப்படும் பணம் நீதிமன்றத்தின் உத்தரவின்படி கருவூலத்தில் செலுத்த வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'நீட் விலக்கு மசோதாவிற்கு ஆளுநர் விரைவாக ஒப்புதல் அளிப்பார்'