கரோனா வைரஸ் தடுப்பு மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை காரணமாக பிப்ரவரி மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டன. மீண்டும் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது இதுவரை முடிவு செய்யப்படவில்லை.
தமிழ்நாட்டில் பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு சத்தான உணவுடன் வாரத்தின் ஐந்து நாள்களும் முட்டை வழங்கப்பட்டு வருகிறது. இதனால் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குப் போதுமான ஊட்டச்சத்து கிடைக்கிறது.
கடந்த கல்வி ஆண்டில் ஏப்ரல் மாதம் முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன. கோடை கால விடுமுறையாக, மே மாதத்தில் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்படாது. விடுமுறை முடிந்து ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில், இதுவரை பள்ளிகள் திறக்கப்பட வில்லை. எனவே, சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்குத் தேவையான சத்துக்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது.
இந்த நிலையில் மத்திய அரசின் அறிவுரைப்படி, சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர்ந்த அரிசி மற்றும் பருப்பு மாதம்தோறும் வழங்கவேண்டுமென தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
அதனடிப்படையில் தமிழ்நாட்டிலுள்ள தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு சத்துணவுக்கு அளிக்கவேண்டிய அரிசி மற்றும் பருப்புகள் அனைத்தும், சத்துணவு பணியாளர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.
ஐந்தாம் வகுப்பு வரை தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஒரு மாதத்திற்கு 3.100 கி.கிராம் அரிசியும், பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 4.150 கி.கிராம் அரிசியும் , அனைத்து மாணவர்களுக்கும் தலா 465 கிராம் பருப்பும் வழங்க வேண்டும்.
தமிழ்நாட்டிலுள்ள தொடக்கப்பள்ளிகளில் பயிலும் சத்துணவு உண்ணும் 20 லட்சத்து 39 ஆயிரத்து 483 மாணவர்களில், 17 லட்சத்து 87 ஆயிரத்து 989 மாணவர்களுக்கும்; உயர் நிலைப் பள்ளியில் படிக்கும் 14 லட்சத்து 73 ஆயிரத்து 773 மாணவர்களில், 12 லட்சத்து 38 ஆயிரத்து 703 மாணவர்களுக்கு அரிசி மற்றும் பருப்பு வழங்கப்பட்டுள்ளது என சமூக நலத்துறை அலுவலர் தெரிவித்தார்.
சென்னை, காஞ்சிபுரம், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, விழுப்புரம், விருதுநகர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு அதிகளவில் சத்துணவுப் பொருள்கள் வழங்கப்படாமல் உள்ளது.