சென்னை:தமிழ்நாடு அரசு சார்பில் பொங்கல் பரிசுத்தொகுப்பு நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்பட்டுவருகிறது. அந்த வகையில், ரூ.1,000 ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி மற்றும் ஒரு கிலோ சர்க்கரை ஆகியவை பொங்கல் பரிசுத்தொகுப்பாக வழங்கப்படும் என்று கடந்த டிச.22ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இந்த தொகுப்பில் கரும்பு இடம் பெறாதது, கரும்பு விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. தமிழ்நாடு முழுவதும் உள்ள கரும்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தமிழ்நாடு அரசு, பொங்கல் தொகுப்புடன் ஒரு முழுக் கரும்பும் வழங்கப்படும் என்று டிச.28ஆம் தேதி அறிவித்தது.
இதன் அடிப்படையில் கரும்பு விவசாயிகளிடம் இருந்து கரும்பு கொள்முதல் செய்யப்பட்டது. தொடர்ந்து ஜன.3ஆம் தேதி முதல் ஜன.8ஆம் தேதி வரை பரிசுத்தொகுப்புக்கான டோக்கன்கள் நியாயவிலைக் கடை ஊழியர்களால் வீடு வீடாகச் சென்று விநியோகம் செய்யப்பட்டன.