சென்னை:பள்ளிக் கல்வித் துறையின்கீழ் செயல்படும் அரசுத் தேர்வுகள் துறையில் இளநிலை உதவியாளர் பணிக்கு போலி நியமன ஆணைகள் தயாரித்து பல லட்சம் ரூபாய் வரை மோசடி நடந்துள்ளது. அந்தப் பணி நியமன ஆணையில் சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பெயரில் கையொப்பமிடப்பட்டுள்ளது.
அரசுத் தேர்வுகள் துறையில் இளநிலை உதவியாளர் பணிக்கு மாதம் 22 ஆயிரத்து 500 ரூபாய் ஊதியம் வழங்கப்படும் என ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மோசடி கும்பலிடம் அரசுப் பணிக்கு ஆசைப்பட்டு பலர் ஏமாந்துள்ளதாகத் தெரிகிறது.
போலி பணி நியமன ஆணைகள் பெற்ற நபர்களைத் தினசரி பள்ளிக் கல்வித் துறை வளாகத்திற்கு வரவைத்த மோசடி கும்பல், அவர்களை நம்பவைக்க வருகைப் பதிவேட்டில் கையெழுத்தும் பெற்றிருக்கின்றது.
இது குறித்து சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகார் குறித்து விசாரணை மேற்கொள்ளும்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:சசிகலா உறவினர் மீது பணமோசடி வழக்கு: விரைவில் விசாரணைக்கு எடுக்கும் நீதிமன்றம்