கடலூர் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த மேல்குமாரமங்கலத்தை சேர்ந்தவர் ஆறுமுகம், இவர் "மேல்குமாரமங்கலம்" என்ற பெயரில் வாட்ஸ் ஆப் குழு நடத்தி வருகிறார்.
இதில் "கரோனா சமயத்தில் மாயமான தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்" என தலைப்பிட்டு அவருடைய புகைப்படத்துடன் சில தகவல் பரப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக, அதிமுக தொண்டர் ரஜினி என்பவர் ஏப்ரல் 2ஆம் அளித்த புகாரில், மாவட்டம் முழுவதும் நிவாரணப் பொருள்களும், கரோனா ஒழிப்பு பணிகளும் அமைச்சர் எம்.சி.சம்பத் மேற்பார்வையில் நடைபெற்றுவரும் நிலையில், அமைச்சர் மாயம் என தவறான தகவல் பரப்புவதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில், ஆறுமுகம், பாலாஜி ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் காவல்துறையினர் தங்களை கைது செய்யக் கூடும் என்பதால், தங்களுக்கு முன் ஜாமீன் வழங்கக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆறுமுகம், பாலாஜி ஆகிய இருவரும் மனுத்தாக்கல் செய்தனர்.
அந்த மனு, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, இருவரும் அமைச்சர் குறித்து கட்டுக்கதைகளை பரப்புவதால், காவலில் வைத்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இருவரின் முன் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டார்.
இதையும் பார்க்க: 'மின்சாரச் சட்டத்திருத்தம் - 2020... மாநில இறையாண்மைக்கு எதிரானது'