தமிழ்நாடு

tamil nadu

ஆளுநரை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கில் இன்று தீர்ப்பு!

By

Published : Jan 5, 2023, 8:41 AM IST

Updated : Jan 5, 2023, 4:08 PM IST

ஆரோவில் அறக்கட்டளை தலைவராக இரட்டை பதவி வகிக்கும் தமிழ்நாடு ஆளுநரை தகுதி நீக்கம் செய்ய கோரிய வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்த முக்கிய உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் இன்று வழங்க உள்ளது.

இரட்டை பதவி வகிக்கும் ஆளுநரை தகுதி நீக்கம் செய்ய கோரிய வழக்கு மீது இன்று உத்தரவு!
இரட்டை பதவி வகிக்கும் ஆளுநரை தகுதி நீக்கம் செய்ய கோரிய வழக்கு மீது இன்று உத்தரவு!

சென்னை:தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் கண்ணதாசன், ஆரோவில் அறக்கட்டளையின் நிர்வாகக் குழு தலைவராக உள்ள தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இரட்டைப் பதவி வகிப்பதால், எந்த தகுதியின் அடிப்படையில் ஆளுநர் பதவியில் நீடிக்கிறார் என விளக்கமளிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், ‘ஆரோவில் அறக்கட்டளை சட்டப்படி, தலைவர் பதவியில் நியமிக்கப்பட்டவருக்கு ஊதியம், படி, ஓய்வூதியம் உள்ளிட்டவை வழங்கப்படும் என்பதால், அவர் ஆதாயம் தரும் இரட்டை பதவி வகிக்கிறார். இந்திய அரசியல் சாசனம் 158 (2)வது பிரிவின்படி, ஆளுநராக பதவி வகிப்பவர் ஆதாயம் தரும் இரட்டை பதவி வகிக்க கூடாது.

ஆரோவில் அறக்கட்டளை தலைவராக பொறுப்பேற்ற நாளில் இருந்து, ஆர்.என்.ரவி ஆளுநராக பதவியில் நீடிக்க தகுதியிழப்பு ஆகிறார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த மனு பொறுப்புத் தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், “ஆளுநர் மீது வழக்கு தொடர முடியாது என அரசியல் சாசனம் சட்டப் பாதுகாப்பு வழங்கியிருந்தாலும், அது ஆளுநர் என்ற பதவியின் செயல்பாடுகள் தொடர்பானதுதான். தனிப்பட்ட முறையில் அவரது செயல்பாடுகள் தொடர்பாக வழக்கு தொடர முடியும்.

ஆதாயம் தரும் பதவி வகிக்கும் ஆளுநர் ரவி, சட்ட விதிகளின்படி ஆளுநர் பதவியில் நீடிக்கிறாரா என விளக்கமளிக்க வேண்டும். சட்ட விதிகளுக்கு முரணாக பதவியில் நீடிப்பதாக இருந்தால், அவரை தகுதி நீக்கம் செய்யலாம்” என வாதிடப்பட்டது. மேலும் பல மாநிலங்களில் ஆளுநர் விளக்கமளிக்க உயர் நீதிமன்றங்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகக் கூறி, பல்வேறு தீர்ப்புகளை மேற்கோள்காட்டி மனுதாரர் தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிபதிகள், “வழக்கு விசாரணைக்கு உகந்ததுதானா?” என்பது குறித்த தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர். இந்த நிலையில், இந்த வழக்கில் பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு இன்று (ஜன.5) தீர்ப்பளிக்க உள்ளது.

இதையும் படிங்க:தேர்தல் நேரத்தில் உறுதியளித்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை - அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

Last Updated : Jan 5, 2023, 4:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details