சென்னை: மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் துறையின் சார்பில் 48.80 கி.மீ. நீளமுள்ள 30 நீர்வழிக் கால்வாய்கள் பராமரிக்கப்பட்டுவருகின்றன. சென்னை மாநகராட்சியின் இயந்திரப் பொறியியல் துறையின் மூலம் வெளிநாடுகளிலிருந்து தருவிக்கப்பட்ட அதிநவீன இயந்திரங்களான நீர், நிலத்தில் இயங்கும் ஆம்பிபியன் இயந்திரங்கள், ரொபோடிக் எக்ஸவேட்டர் இயந்திரங்கள் ஆகியவற்றின் உதவியுடன் நீர்நிலைகளில் படர்ந்துள்ள ஆகாயத் தாமரைகள், வண்டல்கள் அகற்றப்பட்டுவருகின்றன.
பருவமழை காலத்திற்கு முன்னதாகவே நீர்வழிக் கால்வாய்களில் மாநகராட்சியின் இயந்திரங்கள் மூலம் ஆகாயத் தாமரைகள் அகற்றப்பட்டு, வண்டல்கள் தூர்வாரப்பட்டு தண்ணீர் தங்குதடையின்றிச் செல்லும்வகையில் பராமரிப்புப் பணிகளும், கொசுப்புழுக்கள் வளர்வதைக் கட்டுப்படுத்த ட்ரோன் இயந்திரங்கள் கொண்டு கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.