தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு அனுமதியை எதிர்த்து திருமா கோரிய மனு தள்ளுபடி - திருமா மனு தள்ளுபடி

ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு அனுமதியளித்து பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு அனுமதியை எதிர்த்து திருமா கோரிய மனு தள்ளுபடி...!
ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு அனுமதியை எதிர்த்து திருமா கோரிய மனு தள்ளுபடி...!

By

Published : Oct 18, 2022, 11:41 AM IST

சென்னை:தமிழ்நாட்டில் அக்டோபர் 2ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கும்படி பல்வேறு நிபந்தனைகளை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் செப்டம்பர் 22ஆம் தேதி உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது திருமாவளவன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், மத நல்லிணக்கம், சட்டம் - ஒழுங்கு பிரச்னை சம்பந்தப்பட்டுள்ளதால் மறு ஆய்வு கோர உரிமை உள்ளதாக வாதிட்டார். மேலும், அணிவகுப்புக்கு அனுமதி கோரியது என்பது உரிமையியல் பிரச்னை எனவும், அதை சம்பந்தப்பட்ட நீதிபதி முன் விசாரணைக்கு பட்டியலிட்டிருக்க வேண்டும் எனவும், மாறாக குற்றவியல் வழக்காக விசாரணைக்கு உகந்ததல்ல எனவும், அதனால் அந்த வழக்கில் பிறப்பித்த உத்தரவுகளை மறு ஆய்வு செய்ய வேண்டும் எனவும் திருமாவளவன் தரப்பில் வாதிடப்பட்டது.

காவல் கண்காணிப்பாளரையோ, காவல் ஆணையரையோ எதிர்மனுதாரராக சேர்ப்பதால் மட்டும் உரிமையியல் வழக்கை, குற்றவியல் வழக்காக கருத முடியாது எனவும் வாதிடப்பட்டது. இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி, திருமாவளவன் தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

இன்று (அக் 18) இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி இளந்திரையன், கடந்த செப்டம்பர் மாதம் பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்ய மறுத்து, திருமாவளவன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: வீடியோ: ஓடும் பேருந்தின் மேற்கூரையில் நின்றுகொண்டு பெண்களிடம் "மான் கராத்தே" போஸ்

ABOUT THE AUTHOR

...view details