சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்த உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் சமீபத்தில் தன் அறிக்கையை அரசுக்கு அளித்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக உயர் நீதிமன்ற நீதிபதியை நியமித்து, நடவடிக்கை எடுக்கக் கோரி ஜோசப் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
அந்த மனுவில், ஆறுமுகசாமி ஆணைய விசாரணையில் முக்கிய உண்மை தகவல்களை சசிகலாவும், அப்பல்லோ மருத்துவமனையும் மறைத்து உள்ளதாகத் தெரிவித்து உள்ளார். சுகாதாரத் துறை முன்னாள் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவர் பாலாஜி ஆகியோரும் தகவல்களை மறைத்தார்கள் என அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாக மனுவில் தெரிவித்து உள்ளார்.
இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா என நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்றத்துக்கு உதவியாக தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், முன்னாள் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் மற்றும் தற்போதைய அரசு பிளீடர் முத்துகுமார் ஆகியோர் விசாரணை ஆணைய சட்டப்படி, ஆணைய அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பது குறித்து மாநில அரசுதான் முடிவு எடுக்க முடியும் எனவும், நீதிபதியை நியமித்து நடவடிக்கை எடுக்கும் படி மாநில அரசுக்கு உத்தரவிடும்படி உரிமையாக கோர முடியாது என்றனர். இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனக் கூறி, ஜோசப்பின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு இட்டார்.
இதையும் படிங்க:"சட்டப்பேரவை இல்லை; மன்னராட்சி தர்பார்" - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்