சென்னை:பெரம்பூர் கூட்டுறவு கட்டட சங்கத்தின் தலைவரான கிருஷ்ணமூர்த்தி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ஒரு சங்கத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர், துணைத் தலைவர் ஆகியோர் முறைகேட்டில் ஈடுபட்டால் அவர்களிடம் விசாரணை நடத்தவோ, பணி நீக்கம் செய்யவும் ஏற்கனவே விதிகள் உருவாக்கப்பட்டு உள்ளதாகவும், அவர்களை ஊதியம் பெறும் ஊழியர்களாகக் கருதி இடைநீக்கம் செய்யும் வகையில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருக்கு அதிகாரம் வழங்கி கொண்டுவரப்பட்ட கூட்டுறவு சங்க சட்டத்திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், சத்தியகுமார் ஆகியோர் முன்னிலையில் முன்னதாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் பி.ஹெச்.அரவிந்த் பாண்டியன், எல்.பி.சண்முகசுந்தரம் ஆகியோர் ஆஜராகி, எம்பி, எம்எல்ஏக்கள் போன்று தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை அரசு அலுவலர்கள் இடைநீக்கம் செய்ய முடியாது என்றும், இதற்கு முரணாக கொண்டுவரபட்ட சட்டத் திருத்தம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் வாதிட்டனர்.
தொடர்ந்து, தமிழ்நாடு அரசு தரப்பில் பேசிய அரசு பிளீடர் பி.முத்துக்குமார், சங்கங்களின் நலனுக்காகவே சட்டத்திருத்தம் கொண்டுவரப்படதாகவும், பல்வேறு முறைகேடுகளால் சங்கங்கள் பாதிக்கப்படுவதாகவும், ஆகவே இந்த சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது அரசியலமைப்பு சட்டத்துக்கு புறம்பானது எனக் கூற முடியாது என்றும் அரசு தரப்பில் விளக்கம் அளித்தார்.