தமிழ்நாடு முழுவதும் உள்ள வணிக வளாகங்கள், பொதுப் பயன்பாட்டுப் பகுதிகளைச் சட்டவிரோதமாக வாடகைக்கு விடுவதாகக் கூறி இந்தியன் மக்கள் மன்ற நிறுவனர் வாராகி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கைத் தாக்கல்செய்தார்.
அந்த மனுவில், "பொதுப் பயன்பாட்டுப் பகுதிகளில் கடைகள் அமைக்கப்படுவது, பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும், மக்கள் நடைபாதைக்கு இடையூறாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோல பொதுப் பயன்பாட்டுப் பகுதிகளில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள கடைகளை அப்புறப்படுத்த உத்தரவிட வேண்டும். அந்தப் பகுதிகளை வாடகைக்கு விட்டு சுயலாபம் அடையும் மால்களின் உரிமங்களை ரத்துசெய்து கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, தனியார் சொத்துகள் குறித்து பொதுநல வழக்குத் தொடர முடியாது எனவும், இதுபோல பொதுநல வழக்குகள் தாக்கல்செய்யும் நடைமுறையைத் தவறாகப் பயன்படுத்த அனுமதிக்க முடியாது என்றும் கூறி வழக்கை 100 ரூபாய் அபராதம் விதித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
அதேசமயம், திட்ட அனுமதியை மீறியது தொடர்பாக மாநகராட்சியிடம் புகார் அளிக்கலாம் எனத் தெரிவித்த நீதிபதிகள், சம்பந்தப்பட்ட அமர்வின் அனுமதியின்றி பொதுநல வழக்குகளைத் தாக்கல்செய்த மனுதாரருக்கு ஓராண்டு தடைவிதித்தும் உத்தரவிட்டனர்.
ஷாப்பிங் மால்களின் உரிமங்களை ரத்துசெய்யக் கோரிய வழக்கு தள்ளுபடி - சென்னை
சென்னை: பொதுப் பயன்பாட்டுப் பகுதிகளில் சட்டவிரோதமாக கடைகள் அமைக்க அனுமதிக்கும் வணிக நிறுவனங்களின் உரிமங்களை ரத்துசெய்யக் கோரிய வழக்குத் தள்ளுபடிசெய்யப்பட்டது.
![ஷாப்பிங் மால்களின் உரிமங்களை ரத்துசெய்யக் கோரிய வழக்கு தள்ளுபடி இந்தியன் மக்கள் மன்ற நிறுவனர் வாராகி தாக்கல் செய்த பொதுநல வழக்கு தள்ளுபடி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11439286-522-11439286-1618659707229.jpg)
இந்தியன் மக்கள் மன்ற நிறுவனர் வாராகி தாக்கல் செய்த பொதுநல வழக்கு தள்ளுபடி