சென்னை: கொளத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் கோபிகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ’வன்முறை, கொலை, கொள்ளை போன்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் 16 வயது முதல் 35 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
எந்த வித தயக்கமும் இன்றி இளைஞர்கள் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாகவும், இதற்கெல்லாம் அடிப்படையாக சினிமாவில் வரும் வன்முறைக் காட்சிகள் அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். திரையரங்கை நோக்கி ரசிகர்களை வர வைப்பதற்காக நடிகர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த வன்முறைக் காட்சிகளை பார்க்கும் இளைஞர்களும் அதன் உண்மை தன்மையைப் பகுத்தறிய முடியாமல், சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டு தங்களது வாழ்க்கையை தொலைத்துவிடுவதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சினிமாவில் வன்முறை காட்சி வரும்போது "இதில் பயன்படுத்தப்படும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பேப்பரில் செய்யப்பட்டன", "சிவப்பு நிறத்தில் சிந்துவது ரத்தமல்ல; வெறும் கலர் பவுடர் தான்" போன்ற வாசகங்களை இடம்பெற உத்தரவிட வேண்டுமென மனுவில் குறிப்பிட்டுள்ளார்.