சென்னை: தமிழ்நாடு அரசின் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் வழங்குவதற்காக, ஒரு லிட்டர் கொள்ளளவு கொண்ட 4 கோடி பாக்கெட் பாமாயில் சப்ளை செய்வதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டெண்டர் கோரியிருந்தது. இதில், ஒரு லிட்டர் 120 ரூபாய் 25 காசுகள் என்ற விலையில் பாமாயில் சப்ளை செய்த நிலையில், மே 3 ஆம் தேதிக்குள் கூடுதல் பாமாயில் சப்ளை செய்யும்படி உணவுப்பொருட்கள் வழங்கும் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
ஆனால், சென்னையைச் சேர்ந்த ஸ்டார் ஷைன் லாஜிஸ்டிக்ஸ், ருச்சி சோயா உள்ளிட்ட நிறுவனங்கள் சார்பில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இன்று (ஜூன் 1) இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், “வழக்கமாக அரசுக்கு பாமாயில் சப்ளை செய்து வரும் மனுதாரர் நிறுவனங்களுக்கு சந்தை நிலவரம் நன்றாக தெரிந்திருக்கும்.