தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 9, 2020, 12:09 PM IST

Updated : Nov 9, 2020, 1:57 PM IST

ETV Bharat / state

மனுஸ்மிருதி: திருமாவளவன் மீதான வழக்கு தள்ளுபடி - உயர் நீதிமன்றம் உத்தரவு

chennai high court
chennai high court

11:39 November 09

சென்னை: மனுஸ்மிருதி பற்றி அவதூறாகப் பேசிய விசிக தலைவர் திருமாவளவனுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடந்த செப்டம்பர் மாதம் ஐரோப்பிய யூனியன் பெரியார், அம்பேத்கர் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்ட காணொலி கருத்தரங்கில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மனுஸ்மிருதியை மேற்கோள் காட்டி, பெண்கள் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். இவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில், மனுஸ்மிருதியை தடைசெய்யக்கோரி திருமாவளவன் ஆர்ப்பாட்டங்களை நடத்தினார். 

தனது சொந்த அரசியல் லாபத்துக்காக, இந்துக்களை அவமதித்ததுடன், சமூகத்தில் அசாதாரண சூழ்நிலையை உருவாக்கி, நாட்டின் ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்ட திருமாவளவன் மீது நடவடிக்கை மேற்கொள்ளும்படி, மக்களவை செயலாளருக்கு உத்தரவிடக்கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் காசி ராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 

அந்த மனுவில், "2ஆயிரத்து 200 ஆண்டுகளுக்கு முன் எழுதிய மனுஸ்மிருதி குறித்து விளக்கமளிக்க, திருமாவளவன் சமஸ்கிருதத்தில் பண்டிதர் அல்ல.  அவர் அளித்துள்ள விளக்கம் தவறானது. இதுபோன்ற தேவையற்ற விளக்கங்களை அவர் அளித்திருக்கக் கூடாது" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு  தொடர்பாக விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு:  "மக்கள் பிரதிநிதிகள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.  அரசியல் பிரச்னைகளுக்குத் தீர்வு காண நீதிமன்றத்தை பயன்படுத்தக்கூடாது. மனுஸ்மிருதி சட்டப் புத்தகமும் இல்லை. மனுஸ்மிருதி மொழி பெயர்ப்பு சரியா? தவறா? என்பதும் தெரியவில்லை. நீதிமன்றத்தை அரசியல் களமாக மாற்றாதீர்கள்" என சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.  

எந்தச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து விளக்கமளிக்க மனுதாரர் தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இக்கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், வழக்கை வாபஸ் பெற்று விரிவான மனு தாக்கல் செய்ய அறிவுறுத்தினர்.

இதனையடுத்து, மனு ஸ்மிருதி பற்றி அவதூறாகப் பேசிய விசிக தலைவர் திருமாவளவனுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்டது. இதனைத்தொடர்ந்து, இவ்வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.   

இதையும் படிங்க:பள்ளிகள் திறப்பு: பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம்!

Last Updated : Nov 9, 2020, 1:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details