சென்னை:சென்னையில் மெட்ரோ ரயில் பணி, மழைநீர் வடிகால் பணி உள்ளிட்டப் பல்வேறு குடிமராமத்துப் பணிகளால் வாகனங்கள் செல்லும் வழிகள் குறுகி, சாலைகளை பயன்படுத்தும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில், மக்களின் சிரமங்களைக் கருத்தில்கொண்டு சென்னை காவல் ஆணையர் மூலம் நெடுஞ்சாலைத்துறை செயலர், சென்னை மாநகராட்சி ஆணையர், நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பொறியாளர்களுடன் நேற்று(அக்.11) சிறப்பு ஆலோசானைக்கூட்டம் நடத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் மாநகர காவல்துறை அனுமதியுடன் நடைபெற்று வரும் பல்வேறு சாலைப் பணிகள் குறித்தும், சாலைகளைப் பயன்படுத்தும் பொதுமக்களின் சிரமங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டு பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.
குறிப்பாக பொதுமக்களின் சிரமங்களைக் கூடிய விரைவில் போக்கும் வகையில் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க ஏதுவாக சென்னை மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறையிலிருந்து பெறப்பட்ட மழைநீர் வடிகால் பணிகளுக்கான அனுமதிகளை சென்னை காவல்துறையினர் விரைந்து அளிக்கும் வகையில் விரைவுப்படுத்தவும், தற்போது நடைபெற்று வரும் அனைத்துப் பணிகளிலும், எவையெல்லாம் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது பணிகள் என பட்டியலிட்டு சென்னை மாநகராட்சிக்கும், நெடுஞ்சாலைத் துறையினருக்கும் வழங்கி அப்பணிகளை விரைந்து முடிக்க முன்னுரிமை அளிக்கவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பணிகள் முடிந்த மற்றும் நிலுவையில் உள்ள இடங்களில், பணிகள் நிறைவடைந்தவுடன் சாலைகளை முன்பு இருந்ததைப்போல் தரமான நிலைக்குக் கொண்டு வர சென்னை போக்குவரத்து காவல் துறை உதவியுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழைநீர் வடிகால், விடுபட்ட இணைப்பு தொடர்பான பணிகளை விரைந்து முடிக்க முன்னுரிமை அளிப்பதுடன் சென்னை போக்குவரத்து காவல் துறை மூலம் முறையான மற்றும் விரைவான அனுமதியை உறுதி செய்வதற்காக சாலைகளின் குறுக்கே மற்றும் நெடுக்கே வெட்டுவதற்கான பணிகளின் அனுமதியைப் பெறுவதற்கு ஒற்றைச் சாளர அமைப்பை இனி நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் சென்னை காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் இரவில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறும் இடங்களில், தேவையான அறிவிப்புகள் மற்றும் தடுப்புகள் அமைத்து சாலையைப் பயன்படுத்துபவர்களுக்கு அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் புதிய வாட்ஸ்-அப் குழுவை உருவாக்கி நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், மழைநீர் வடிகால் பணிகளை போர்க்கால அடிப்படையில் முடிப்பதற்கு வசதியாக சம்பந்தப்பட்ட துறைகளின் வேண்டுகோளுக்கு இணங்க, அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப குறிப்பிட்ட ரெடி-மிக்ஸ் கான்கிரீட் கலவை வாகனங்களை பகல் நேரங்களிலும், நெரிசல் இல்லாத நேரங்களில் நகர சாலைகளில் இயக்குவதற்கு அனுமதி வழங்க கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை காவல் துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கிறிஸ்தவ வன்னியர்களை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்க்க மனு; அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு