தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை மாநகராட்சி நிதிநிலை அறிக்கை மீதான விவாதம்; சிறப்பான பட்ஜெட் எனத்தெரிவித்த உறுப்பினர்கள் - chennai municipal news

சென்னை மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில், சிறப்பான பட்ஜெட் என தெரிவித்த மாமன்ற உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளையும் முன்வைத்தனர்.

Discussion on chennai Corporation budget that time Councilors said it was an excellent budget
Discussion on chennai Corporation budget that time Councilors said it was an excellent budget

By

Published : Mar 28, 2023, 10:47 PM IST

சென்னை:சென்னை மாநகராட்சியின் 2023-2024ஆம் நிதியாண்டிற்கு நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. இதில் அனைத்து கட்சி மாமன்ற உறுப்பினர்களும் சிறப்பான பட்ஜெட் எனத் தெரிவித்தனர், இருப்பினும் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.

சென்னை மாநகராட்சியின் 2023-2024ஆம் நிதியாண்டிற்கு நிதிநிலை அறிக்கையை சென்னை ரிப்பன் மாளிகை மாமன்ற கூட்டத்தில் மாநகராட்சி மேயர் பிரியா நேற்று மாமன்றக்கூட்டத்தில் தாக்கல் செய்து அறிவிப்புகளை வெளியிட்டார். இதன் தொடர்ச்சியாக நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் இன்று(மார்ச் 28) நடைபெற்றது.
இந்த அறிக்கை மீதான விவாதத்தில் 37 மாமன்ற உறுப்பினர்கள் பேசினர். அவையாவன :-

நகரமைப்புக் குழு தலைவர் இளைய அருணா கூறுகையில்: 'கலைஞர் நூற்றாண்டை பெருமைப்படுத்தும் விதமாக மாமன்ற உறுப்பினர் நிதியை 100 லட்சம் ரூபாயாக மாற்றவேண்டும். சாலைகள் பதிக்கும் ஒப்பந்ததாரர்கள், சாலையை தோண்டிவிட்டு, அப்படியேவிட்டு விடுகிறார்கள். இதனால் ஏற்படும் விபத்தை தடுக்கும் விதத்தில், சாலையை சுரண்டிய 3 தினங்களுக்குள் சாலைகள் பதிக்க வேண்டும் என வலியுறுத்த வேண்டும். இல்லையென்றால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்' எனத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய கல்வி நிலைக்குழு தலைவர் விஸ்வநாதன் பேசுகையில், ' சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இருக்கும் பூங்கா மற்றும் நீச்சல் குளத்தின் பராமரிப்புப் பணிக்கான டெண்டர் தொடர்ந்து ஒருவருக்கு மட்டுமே சென்று கொண்டிருக்கிறது. அவர்கள் பராமரிப்புப் பணிகளை சரிவர மேற்கொள்ளாததால் மாநகராட்சிக்கு இதுவரை 3 கோடியே 27 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் இழப்பீடு ஏற்படுத்தியுள்ளது.
அந்த நிறுவனத்துக்கு தொடர்ந்து டெண்டர் கொடுக்கும் அதிகாரி யார் என்று எனக்கு நன்றாகத் தெரியும். கடந்த ஆட்சியில் நியமிக்கப்பட்ட அதிகாரியால் இது போன்று நடவடிக்கைகள் நடைபெறுகிறது. மாநகராட்சியிலேயே ஒரு கருப்பு ஆடு உள்ளது. எனவே, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் கோரிக்கை வைத்தார்.

அதன் பின்னர் பேசிய பாஜக கட்சியின் மாமன்ற உறுப்பினர் உமா ஆனந்தி கூறுகையில், 'நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் சிறப்பான பட்ஜெட்டாக இருந்தது. கல்விக்கென அதிக நிதி ஒதுக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் தற்போதுள்ள மாணவர்களுக்கு வரலாறு பற்றி தெரிய வேண்டியது மிக முக்கியமானது. எனவே, ரிப்பன் மாளிகையில் சுதந்திரம் பெற்று தந்தவர்கள் பற்றி ஒரு கண்காட்சி வைக்க வேண்டும். மாமன்ற உறுப்பினர் தனசேகரன் அம்மா உணவகத்தின் மூலம் வருவாய் வருவதில்லை எனக் கூறியிருக்கிறார். அம்மா உணவகத்தில் லாபம், நஷ்டம் பார்க்கக் கூடியது இல்லை. இதை முழுமையாக மூடுவது என்பது தவறு' எனத் தெரிவித்தார்.


தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர் ஜெயராமன் உரையாற்றும்போது, 'சென்னை மாநகராட்சிப் பணிகளில் 10 ஆண்டுகளாக பணியாற்றும் NUML தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பல பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. மாநகராட்சி ஒரு மருத்துவக் கல்லூரி நடத்த வேண்டும்; முயற்சி செய்ய வேண்டும். திருவொற்றியூர் பகுதியில் சில மாநகராட்சிப் பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை இருக்கிறது. அனைத்து மண்டலத்திலும் டயாலிசஸ் மையம் கொண்டு வர வேண்டும்’ எனத் தெரிவித்தார்.

பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்ற ரேணுகா பேசுகையில், ''இந்த மாநகராட்சி பட்ஜெட்டில் கல்வி என பல அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மக்களுக்குத் தேவையான மருத்துவத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கி இருக்கலாம். அதுமட்டுமின்றி பல துறைகளில் நிதி குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளது. திடக்கழிவு துறைக்கும் நிதி என்பது குறைவாகவே ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் NUML தற்காலிகப் பணியாளர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் கோரிக்கை வைத்தார்.

இதையும் படிங்க: ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கான ஓய்வு பலன்களுக்காக ரூ.1,032 கோடி வழங்கல்!

ABOUT THE AUTHOR

...view details