தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் தாமரையை மலரச்செய்யப்போகும் அடுத்த தலைவர் யார்? - telegana

சென்னை:  தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை சௌந்தரராஜன் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, அக்கட்சிக்கு புதிய மாநில தலைவரை ஓரிரு நாட்களில் அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாஜக சின்னம்

By

Published : Sep 2, 2019, 12:03 PM IST

தமிழ்நாடு பாஜக மாநில தலைவராக பொறுப்பு வகித்து வந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டத்தையடுத்து அவர் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதனைதொடர்ந்து அக்கட்சிக்கு புதிய தலைவர் ஓரிரு நாளில் அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாஜகவின் தேசிய செயலாளராக பணியாற்றி வந்த தமிழிசை சௌந்தரராஜன் 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாநில தலைவராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து ஐந்து ஆண்டுகாலம் மாநில தலைவராக பணிபுரிந்து வந்த அவரை, தெலுங்கானாவின் ஆளுநராக நியமனம் செய்து இன்று அறிவிப்பு வெளியிட்டது.

இந்திய அரசியலமைப்பு சட்ட விதிகளின்படி ஒரு மாநிலத்தின் ஆளுநராக பதவி ஏற்பவர் எந்தக் கட்சியிலும் அடிப்படை உறுப்பினராகக்கூட இருக்கக்கூடாது. அதனடிப்படையில் தெலங்கானா ஆளுநராக அறிவிக்கப்பட்ட தமிழிசை சௌந்தரராஜன் பாஜகவில் தான் வகித்துவந்த அனைத்து பொறுப்புகளையும் ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை அகில இந்திய பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு அனுப்பிவைத்தார்.

பாஜக மாநிலத் தலைவர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தை தமிழ்நாடு பாஜகவின் அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகத்திடம் வழங்கினார். இந்தநிலையில் தமிழக பாஜகவின் புதிய தலைவராக யார் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பது குறித்து அக்கட்சியினர் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

பாஜகவின் புதிய மாநிலத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கு தேசிய தலைவர் அமித்ஷா சில நிபந்தனைகளை விதித்து உள்ளதாக தெரிகிறது. அவற்றில் முக்கியமாக ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகளில் பணியாற்றும், கட்சிக்காக 24 மணி நேரமும் உழைத்த சுமார் 45 வயதிற்குட்பட்ட நபரை தேர்வு செய்து அவர் மூலம் கட்சியை வளர்க்க வேண்டுமென விரும்புவதாக தெரிகிறது.

ஆனால் அதேநேரத்தில் மத்திய, மாநில பாஜக நிர்வாகிகள் - ஏற்கனவே தமிழக மக்களுக்கு அறிமுகமான இரண்டாம் கட்ட தலைவரிலிருந்து யாராவது ஒருவரை நியமிக்கலாம் என கூறியுள்ளதாக தெரிகிறது.

தமிழக பாஜகவின் மாநில தலைவராக நியமனம் செய்வதற்கு , பாஜகவின் மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், சி.பி. ராதாகிருஷ்ணன், அதிமுகவிலிருந்து பாஜகவில் இணைந்த முன்னாள் மத்திய அமைச்சர் நயினார் நாகேந்திரன், பாஜகவின் கே.டி. ராகவன், நரேந்திரன், பாஜகவின் இளைஞர் அணி தேசிய செயலாளராக விளங்கும் ஏ பி முருகானந்தம் ஆகியோரில் யாராவது ஒருவரை நியமிக்க பாஜக மேலிடம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

ABOUT THE AUTHOR

...view details