சென்னை :பள்ளிகளில் கரோனா பாதுகாப்பு வழிமுறைகள் எவ்வாறு பின்பற்றப்படுகிறது என்பது குறித்தும், 1 முதல் 8 ம் வகுப்பு வரை மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்தால் தேவையான வகுப்பறைகள் உள்ளதா என்பது குறித்தும் செப்டம்பர் 14ஆம் தேதி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழ்நாடு அரசு செப்டம்பர் 15ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் தொடங்க உத்தேசித்துள்ளது. ஆனாலும் தற்போது தொற்று எண்ணிக்கை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது.
1 முதல் 8ஆம் வகுப்பு பள்ளிகள் திறப்பு?
செப்டம்பர் 1ஆம் தேதி முதல் ஒன்பது முதல் 12ஆம் வகுப்பு வரை வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதனையடுத்து ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை வகுப்புகளை தொடங்குவது குறித்து தமிழ்நாடு அரசு பரிசீலித்து வருகிறது. தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், சில ஆசிரியர்கள், மாணவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.