சென்னை:மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படும் லித்தியம்-அயன் பேட்டரிகளுக்கு மாற்றாக, இயந்திரக் கருவி மூலம் ரீசார்ஜ் செய்யக்கூடிய ஜிங்க்-ஏர் பேட்டரிகளை உருவாக்கும் பணியை சென்னை உள்ள இந்திய தொழில்நுட்பக் கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த புதிய பேட்டரி தொழில்நுட்ப காப்புரிமைக்காக விண்ணப்பித்த ஆராய்ச்சியாளர்கள், ஜிங்க்-ஏர் பேட்டரிகளை உருவாக்கப் பெரிய தொழில் நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். தற்போது உள்ள லித்தியம்-அயன் பேட்டரிகளுடன் ஒப்பிடுகையில், இவை சிக்கனமானவை மட்டுமின்றி நீண்ட ஆயுட்காலம் கொண்டவையாகும். ஜிங்க்-ஏர் பேட்டரிகளை இரு சக்கர, மூன்று சக்கர மின்சார வாகனங்களில் பயன்படுத்த முடியும்.
இந்திய அரசின் கொள்கைகள் மற்றும் மாசுபாட்டைக் குறைக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளால் இந்திய மின்சாரத்துறை சமீபகாலமாக மிக வேகமாக வளர்ச்சி கண்டுவருகிறது. மின்சார வாகனங்களில் பெரும்பாலும் லித்தியம்-அயன் பேட்டரிகள்தான் பயன்படுத்தப்படுகின்றன. லித்தியம்-அயன் பேட்டரிகளை பெருமளவில் சீனா உற்பத்தி செய்வதால், மின்சார வாகன பேட்டரி உற்பத்தித் துறையில் ஆதிக்கம் செலுத்துகிறது. இந்திய மின்சார வாகன உற்பத்தி நிறுவனங்கள் பெரும்பாலும் சீனாவில் இருந்துதான் லித்தியம்-அயன் பேட்டரிகளை இறக்குமதி செய்கின்றன.
லித்தியம்-அயன் பேட்டரிகள் குறிப்பிட்ட அளவு மட்டுமே கிடைக்கும் என்பது உள்ளிட்ட பல்வேறு வரம்புகள் உள்ளன. மேலும் இந்தியச்சந்தையின் வெவ்வேறு தேவைகளை லித்தியம்-அயன் பேட்டரிகளால் மட்டுமே பூர்த்தி செய்துவிட முடியாது. லித்தியம்-அயன் பேட்டரிகளுக்கு மாறாக குறைந்த செலவில் புதிய சாதனம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் சென்னை ஐ.ஐ.டி.யின் ரசாயனப் பொறியியல் துறை உதவிப் பேராசிரியரான அரவிந்த்குமார் சந்திரன் மற்றும் அவரது ஆராய்ச்சிக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். துத்தநாகம் பரவலாகக் கிடைக்கக் கூடியது என்பதால், ஜிங்க்-ஏர் பேட்டரிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.