சென்னை: பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்வித்துறையின் அரசு உதவிப்பெறும் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்குச் சம்பளம் அரசால் வழங்கப்பட்டு வருகிறது. பணி நியமனத்திற்கான அனுமதி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் மூலம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.
அரசு உதவிப் பெறும் பள்ளி நிர்வாகங்களின் வற்புறுத்தல் காரணமாக தொடக்கக்கல்வித்துறை மாவட்டங்களில் பணிபுரியும் அலுவலர்கள் விதிகளை மீறி பணியில் அனுமதி வழங்குகின்றனர். அதன் பின்னர் நிர்வாகம் சார்பில் நீதிமன்றத்திற்குச் செல்கின்றனர். அப்போது சரியான தகவல் அளிக்காமல் இருப்பதால் அரசிற்குத் தொடர்ந்து நிதி இழப்பு ஏற்படுகிறது.
இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நீதிமன்றத்திற்குச் சரியான தகவல் அளிக்காமலிருந்த அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.