சென்னை: போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மத்திய அரசின் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின்படி புதிய ஊதியத்திற்குரிய 21 மாதகால நிலுவைத் தொகை வழங்க வேண்டும் , புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் , ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், சிறப்பு காலமுறை ஊதியம் மற்றும் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு முறையான ஊதியம் வழங்க வேண்டும், பணியாளர் பகுப்பாய்வு குழுவினை அமைத்து வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பல்வேறு சங்கங்கள் அரசுக்கு முன்வைத்து வந்தனர்.
அவற்றுள், சில பணியாளர் சங்கங்கள் ஒன்றிணைந்து அந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி 22 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மக்கள் பணியில் பாதிப்பு ஏற்பட்டது . இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தின் காரணமாக, மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவும், மக்களின் நலனுக்காக பணியாற்றும் அரசு அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவும், நிர்வாக கட்டுப்பாட்டை நிலைநிறுத்தவும் அரசு சில நடவடிக்கைகளை மேற்கொண்டது.
அத்தகைய நடவடிக்கைகளில் ஒன்றாக, 7ஆயிரத்து 898 அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இது தவிர , சாலை மறியல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட 17 ஆயிரத்து 686 ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது 408 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பின்னர் அவர்கள் அனைவருமே பிணையில் விடுவிக்கப்பட்டனர். அதுபோல 2ஆயிரத்து 338 நபர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, பின்னர் மீண்டும் பணியமர்த்தப்பட்டனர்.
இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தின் போது , அப்போராட்டத்திற்கு தடைகோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தொடரப்பட்ட பொதுநல வழக்கின் விசாரணையின் போது , போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது மேற்கொள்ளப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் கைவிட வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து , நீதிமன்றத்தால் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.