சென்னை:தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம், தீவிரப் புயலாக மாறி வடக்கு மற்றும் வடகிழக்குத் திசையில் நகர்ந்து வருவதால் மீனவர்கள், படகுகள், விசைப்படகுகள், பயணியர்கள் வங்காள விரிகுடா மற்றும் தெற்கு அந்தமான் கடலுக்குள் 14ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது எனவும்,
ஏற்கெனவே, கடலுக்குள் சென்ற மீன்பிடிப் படகுகள் விரைவாக கரைக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது எனவும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமசந்திரன் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இந்திய வானிலை ஆய்வு மையம், வெளிட்டுள்ள அறிவிக்கையில் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம், தீவிரப் புயலாக மாறி வடக்கு மற்றும் வடகிழக்குத் திசையில் நகர்ந்து வருவதாகவும் இதற்கு ’மோக்கா’ என பெயரிடப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.
இது மேலும், அதி தீவிர புயலாக உருவெடுத்து மத்திய வங்கக்கடல் பகுதியினை கடந்து நாளை மறுநாள் சற்று வலுவிழந்து 14ஆம் தேதி 120 – 145 கி.மீ. மணி வேகத்துடன் வங்கதேசம் மற்றும் மியான்மர் இவற்றுக்கு இடைப்பட்ட பகுதியில் கரையைக் கடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.