சென்னை: திருப்பூர் மாவட்டம், தாராபுரம் முத்துநகரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வழக்கறிஞர் முருகானந்தம் என்பவரை, அதே பகுதியைச் சேர்ந்த தண்டபாணி என்பவர் அளித்த பொய் புகாரில், தாராபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கார்த்திகேயன், கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்துள்ளார். முருகானந்தத்தை தாக்கியதுடன் ஆபாசமாக திட்டியுள்ளார். பின்னர் கோவை சிறையில் அடைக்கப்பட்ட முருகானந்தம், 2020 மார்ச் 10ஆம் தேதி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
இதையடுத்து தனக்கு நேர்ந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக முருகானந்தம் தாக்கல் செய்த புகாரை விசாரித்த தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம், அவருக்கு 1 லட்சம் ரூபாயை இழப்பீடு வழங்கவும், உதவி ஆய்வாளருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்தும், தனக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரியும், தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய வசதிகளை செய்து கொடுக்கவும், தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரியும் முருகானந்தம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.