சென்னை: தமிழ்நாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 1895 கவுரவ விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்தப் பணியிடங்களுக்கு 9,915 நபர்கள் விண்ணப்பித்தனர். அவர்களில் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான மதிப்பெண் தரவரிசை அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறுகிறது.
மேலும் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் 385 பேர் தகுதி பெற்று இருக்கின்றனர்.
இந்நிலையில் சைதாப்பேட்டையில் 70க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர். ஆனால், பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிமுறைகளைப் பின்பற்றி சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறவில்லை எனக்கூறி கவுரவ விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.