தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கழிவுநீர் கலக்கக் கூடாது - தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு - பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கழிவுநீர்

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கழிவுநீரை கலக்கக் கூடாது எனவும், குப்பைகளைக் கொட்டக் கூடாது என்றும் சென்னை மாநகராட்சிக்கு தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கழிவுநீர் கலக்கக் கூடாது
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கழிவுநீர் கலக்கக் கூடாது

By

Published : Feb 3, 2022, 6:39 AM IST

சென்னை:பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டடக் கழிவுகள் கொட்டப்படுவதாக 2016ஆம் ஆண்டு வெளியான செய்தியின் அடிப்படையில், தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

சதுப்பு நிலத்தில் பொதுப்பணித் துறை சாலை அமைப்பதற்குத் தடைவிதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நிலுவையிலுள்ள நிலையில், பள்ளிக்கரணை சதுப்பு நிலம், மொத்த சென்னை நகரின் குப்பைக் கிடங்காக மாற்றப்பட்டுவிட்டதாகவும், ஏற்கனவே 250 ஏக்கர் சதுப்பு நிலத்தில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளதாகவும், குப்பைகள் எரிக்கப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும் கூறி, மேகநாதன் என்பவர் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த இரு வழக்குகளையும் விசாரித்த தீர்ப்பாயத்தின் நீதித் துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன், நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் அடங்கிய அமர்வு, சுதந்திரத்துக்கு முந்தைய காலத்திலிருந்து பள்ளிக்கரணை சதுப்பு நிலம் எவ்வளவு பரப்பில் இருந்தது என்பது குறித்து விரிவாக ஆய்வு நடத்தி, அதிலுள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

மாநில சுற்றுச்சூழல் துறைச் செயலாளர் தலைமையில் உயர்மட்டக் குழுவை அமைத்து, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்கப்பட்ட சதுப்பு நிலமாக அறிவித்து, அதைப் பாதுகாப்பதற்கான செயல்திட்டத்தை வகுக்க வேண்டும் எனவும், பெருங்குடி குப்பைக் கிடங்கை பழைய நிலைக்கு மீட்டெடுத்து, வனத்துறையிடம் ஒப்படைப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் எனச் சென்னை மாநகராட்சிக்கும் உத்தரவிட்டது.

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கழிவுநீரை கலக்கக் கூடாது எனவும், குப்பைகளைக் கொட்டக் கூடாது என்றும் சென்னை மாநகராட்சிக்கும், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்திற்கும் உத்தரவிட்ட தீர்ப்பாயம், சதுப்பு நில நீரை சோதித்து, அது மாசடைந்திருந்தால், கழிவுநீரை சதுப்பு நிலத்தில் கலக்கச் செய்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கும் பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

சதுப்பு நிலத்தைப் பாதுகாக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து அவ்வப்போதைக்கு அறிக்கைகள் தாக்கல்செய்ய அரசுக்கு உத்தரவிட்ட தீர்ப்பாயம், வழக்கை முடித்துவைத்தது.

இதையும் படிங்க:ராமஜெயம் கொலை வழக்கு: சிபிஐக்கு உதவ தமிழ்நாடு காவல்துறை அலுவலர்கள் பட்டியல் தாக்கல் செய்ய உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details