தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விழுப்புரம் காப்பகம் வழக்கு: விசாரணை அறிக்கையை ஒரு வாரத்தில் தாக்கல் செய்ய உத்தரவு!

விழுப்புரம் காப்பகம் தொடர்பான வழக்கில், விசாரணை அறிக்கையை ஒரு வாரத்தில் தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

By

Published : Feb 20, 2023, 2:58 PM IST

அன்புஜோதி ஆசிரம வழக்கு
அன்புஜோதி ஆசிரம வழக்கு

சென்னை:விழுப்புரத்தில் செயல்பட்டு வரும் ஆதரவற்றோர் காப்பகத்தில் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், காப்பகத்தில் இருந்த முதியவர்கள் சிலர் காணாமல் போனதாகவும் புகார் எழுந்தது. இதுதொடர்பாக ஹலிதீன் என்பவர் தொடர்ந்த ஆட்கொணர்வு மனு, நீதிபதிகள் சுந்தர், நிர்மல் குமார் ஆகியோர் முன்னிலையில் இன்று (பிப்.20) விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில், "காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் ஆசிரமத்தில் ஆய்வு செய்துள்ளனர். காப்பக உரிமையாளர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்" என வாதாடப்பட்டது. வாதங்களை கேட்ட நீதிபதிகள், வழக்கு குறித்த விசாரணை அறிக்கையை ஒரு வாரத்தில் தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டனர். அடுத்தகட்ட விசாரணையை வரும் 27-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் ஜூபின் பேபி என்பவர், ஆதரவற்றோர் காப்பகத்தை நடத்தி வந்தார். இங்கு மனநலம் குன்றியோர், ஆதரவற்ற பெண்கள், மாற்றுத்திறனாளிகள் பராமரிக்கப்பட்டு வந்தனர். திருப்பூரை சேர்ந்த சலீம்கான், அமெரிக்கா செல்வதற்கு முன்பு தனது மாமா ஸபீருல்லாவை இக்காப்பகத்தில் சேர்த்தார். மேலும் தனது நண்பர் ஹலிதீனிடம், மாமாவை சந்தித்து நலம் விசாரித்து வரும்படி கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில் கடந்த 4-ம் தேதி ஹலிதீன், காப்பகத்துக்கு சென்ற போது ஸபீருல்லா அங்கு இல்லை. அவர் பெங்களூருவில் உள்ள இல்லத்தில் இருப்பதாக கூறினர். பெங்களூரு சென்று பார்த்ததில் அங்கும் அவர் இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து ஸபீருல்லாவை மீட்டுத்தரக் கோரி, ஹலிதீன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில், காப்பகத்தில் இருந்து பலர் காணாமல் போனது தெரியவந்தது. மேலும் ஆதரவற்ற பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதும் கண்டறியப்பட்டது.

இதுகுறித்து 13 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் காப்பக நிர்வாகி கேரளாவை சேர்ந்த ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா ஜூபின், மேலாளர் விஜி மோகன் உள்ளிட்ட 9 பேரை கைது செய்தனர்.

விசாரணையில் இங்கு பராமரிக்கப்பட்டு வருபவர்களை அடித்து துன்புறுத்தியது, பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது உள்ளிட்ட பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. இதையடுத்து 13 பிரிவுகளின்கீழ் இவர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டார். இந்நிலையில், ஹலிதீன் தொடர்ந்த ஆட்கொணர்வு மனு நீதிபதிகள் எம்.சுந்தர் மற்றும் நிர்மல் குமார் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசுத்தரப்பில், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், ஆசிரமத்தில் ஆய்வு செய்துள்ளதாகவும், ஜூபின் பேபி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு குறித்த விசாரணை அறிக்கையை ஒரு வாரத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை பிப்ரவரி 27-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: ஒரே மாதத்தில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியவர்களிடம் ரூ.3 கோடி அபராதம் வசூல்!

ABOUT THE AUTHOR

...view details