தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆவின் பாலை கண்ணாடி பாட்டில் அல்லது டெட்ரா பேக்கில் விற்பனை செய்ய முடியுமா உயர் நீதிமன்றம் - சென்னை மாவட்ட செய்திகள்

ஆவின் பாலை கண்ணாடி பாட்டில் அல்லது டெட்ரா பேக்கில் விற்பனை செய்ய முடியுமா என தமிழ்நாடு அரசு விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

ஆவின்
ஆவின்

By

Published : Aug 12, 2022, 7:57 PM IST

தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் தடை உத்தரவை அமல்படுத்த பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நெகிழி உற்பத்தியாளர்கள் தரப்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு, நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன் மற்றும் பி. டி. ஆஷா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள், பெரும்பாலான உணவுப் பொருட்கள் பிளாஸ்டிக் உறைகளில் தான் அடைக்கப்பட்டு, விற்கப்படுகின்றன என்றும், உடலுக்கு தீங்கு என தெரிந்தும், அதில் வரும் உணவுப்பொருட்களை உண்கிறோம் என்றும் கவலை தெரிவித்தனர்.

ஆவின்

பிளாஸ்டிக் கவர்களில் பால் விற்கப்படுவதை ஏன் தடை செய்யக்கூடாது? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அமுல், நெஸ்லே ஆகியவை நிறுவனங்கள் டெட்ரா பேக்குகளில் பொருட்களை வழங்குவது போல, ஆவின் நிறுவனமும் கண்ணாடி பாட்டில் அல்லது டெட்ரா பேக்கில் ஏன் விற்கக்கூடாது என கேள்வி எழுப்பினார்.

அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில், உடலுக்கு தீங்கு என்றால் தடை செய்ய தயாராக இருப்பதாகவும், அதுகுறித்து அரசின் விளக்கத்தை பெற்று தெரிவிக்க அவகாசம் வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனையை அவ்வப்போது ஆய்வு செய்து தடுப்பதாவும், கடந்த 20 நாட்களில் சென்னை மாநகராட்சியில் மட்டும் 22,930 கடைகள் சோதனை செய்யப்பட்டு, அவற்றில் 8,550 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டு, 514 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டு, 28.83 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதாகவும், சுற்றுச்சூழல் கண்காட்சியை அடுத்த மாதம் நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாகவும், அதில் நீதிபதிகளும் கலந்துகொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. வழக்கு விசாரணைக்கு வரும்போதுதான் அதிரடி சோதனைகள் நடத்தப்படுவதாக சுட்டிக்காட்டிய நீதிபதிகள், சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டிய பொறுப்பு சமூகத்திற்கு உள்ளதாக குறிப்பிட்டனர்.

இதையடுத்து, ஆவின் பாலை பாட்டில் அல்லது டெட்ரா பேக்கில் விற்பனை செய்ய முடியுமா என அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், தண்ணீர் விநியோகிக்கும் வாட்டர் கேன்களின் சுகாதாரம் எவ்வாறு கண்காணிக்கப்படுகிறது என உணவு பாதுகாப்பு துறை ஆணையர் விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 29-க்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க:கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வருவாய் அதிகரித்துள்ளதாக அமைச்சர் மூர்த்தி தகவல்

ABOUT THE AUTHOR

...view details