சென்னை:மதுரையைச் சேர்ந்த இரு பெண்கள் நட்புடன் பழகத் தொடங்கி பின்னர் அது காதலாக மாறியதால், பிரிய மனமில்லாமல் சேர்ந்து வாழ விரும்பியுள்ளனர். இதற்கு இருவரின் பெற்றோரும் எதிர்ப்புத் தெரிவித்து பிரிக்க முயற்சித்ததால், இருவரும் சென்னையிலுள்ள தனியார் தொண்டு நிறுவன காப்பகத்தில் தங்கி வேலை தேடினர்.
இந்நிலையில், இருவரையும் காணவில்லை எனப் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், பதிவான வழக்கில் தங்களைத் துன்புறுத்தக் கூடாது என்றும், தங்களுக்குப் பாதுகாப்பு வழங்கக் கோரியும் இரு பெண்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
பால்புதுமையினரின் உரிமைகளை அங்கீகரிப்பது தொடர்பாக பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்த நீதிமன்றம், அதை நடைமுறைப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல்செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.
காவலர்களுக்குப் பயிற்சி
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது, அப்போது தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர், நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் பால்புதுமையினரை எப்படிக் கையாள வேண்டும் என்பது குறித்தும், அவர்களைத் துன்புறுத்தக் கூடாது எனவும் காவல் நிலையங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும், இது குறித்து காவலர்களுக்கு காவலர் பயிற்சி மையம் மூலமாகப் பயிற்சி அளிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
பால்புதுமையினருக்கு ஆதரவளிக்கும் தொண்டு நிறுவனங்களையும் காவல் துறையினர் துன்புறுத்துவதாக நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.