சென்னை : குற்ற வழக்கு ஒன்றில் விசாரணையை முடித்து இறுதி அறிக்கையை விரைந்து தாக்கல் செய்யும்படி கிருஷ்ணகிரி போலீசாருக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு, நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த 2020ம் ஆண்டே அந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செயயப்பட்டு விட்டதாகவும், ஆனால் அது கோப்புக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
ஆனால், குற்றப்பத்திரிகை நகலை வழங்கக் கோரி விண்ணப்பித்த போது, எந்த அறிக்கையும் தாக்கல் செய்யப்படவில்லை என அந்த மனுவை கீழமை நீதிமன்றம் திருப்பி அனுப்பி விட்டதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இதே குற்றச்சாட்டுடன் பல மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதாகச் சுட்டிக்காட்டிய நீதிபதி, இதை தவிர்க்க, குற்றப் பத்திரிகை தாக்கல் செய்த தேதி, நேரம் ஆகியவற்றை நீதிமன்ற ஊழியர்கள் குறிப்பிட வேண்டும் என உத்தரவிட்டார்.
பின்னர், தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு கோப்புக்கு எடுக்கப்படாமல் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளின் எண்ணிக்கையை சமர்ப்பிக்கும்படி, அனைத்து முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதிகளுக்கும், தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றங்களுக்கும் உத்தரவிட்டார்.
அதேபோல, நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, கோப்புக்கு எடுக்கப்படாத குற்ற வழக்குகளின் எண்ணிக்கையை தெரிவிக்க வேண்டும் என, தமிழக டி.ஜி.பி.க்கும் உத்தரவிட்ட நீதிபதி சதீஷ்குமார், இந்த இரு அறிக்கைகளையும் ஆகஸ்ட் 16 ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க :ராஜிவ் கொலை வழக்கு: ஆயுள் கைதி முருகன் மீதான வழக்கை முடிக்க உத்தரவு!