சென்னை:பட்டயப் படிப்பினை முடித்தவர்கள் 2023 - 2024 கல்வி ஆண்டிற்கான 4 ஆண்டுகள் பகுதி நேர பொறியியல் படிப்புகளுக்கு ஜூன் 28 ஆம் தேதி முதல் ஜூலை 23ஆம் தேதி வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 6 அரசு பொறியியல் கல்லுாரிகள் மற்றும் 2 அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் 4 ஆண்டு பகுதிநேர பொறியியல் பட்டப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.
அவையாவன:
அரசு பொறியியல் கல்லூரி - கோவை, கோயம்புத்தூர் தொழில்நுட்பக் கல்லூரி - கோவை, அரசு பொறியியல் கல்லூரி - சேலம், அரசு பொறியியல் கல்லூரி - திருநெல்வேலி, தியாகராஜர் பொறியியல் கல்லூரி - மதுரை, அழகப்பா செட்டியார் அரசு பொறியியல் கல்லூரி - காரைக்குடி, தந்தை பெரியார் அரசு தொழில்நுட்பக்கல்லூரி - வேலூர், அரசு பொறியியல் கல்லூரி - பர்கூர் ஆகியனவாகும்.
இதையும் படிங்க:TN MEDICAL ADMISSION: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பிற்கு விண்ணப்பப்படிவம் வெளியீடு
பகுதி நேர பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான வழிமுறைகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதில், “இந்தப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் www.ptbe-tnea.com என்ற இணையதள முகவரியின் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பகுதி நேர பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் சான்றிதழ்களையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மேலும் இந்தப் பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் டிப்ளமோ முடித்து இரண்டு ஆண்டுகள் முழுமையாக நிறைவு பெற்றிருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் பணிபுரிகிறவராகவோ அல்லது இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்திருந்தவராகவோ இருக்க வேண்டும் என தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பட்டப்படிப்புக்கு இன்று(ஜூன் 28) முதல் வரும் ஜூலை 23-ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இணையதள வசதி இல்லாத விண்ணப்பதாரர்கள், விண்ணப்பப் படிவத்தினை இணையதளத்தில் இருந்து பதிவு செய்வதற்கு தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை (TFC) மையத்தினை பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது.
இந்த கல்வியாண்டில் 4 ஆண்டுகள் பகுதிநேர பி.இ. பட்டப்படிப்பிற்கான கலந்தாய்வு இணையதளத்தின் மூலமாக மட்டுமே நடைபெறும் எனத் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கல்வியாண்டு முதல் பகுதிநேர பி.இ. பட்டப்படிப்பு நான்கு ஆண்டுகளாக 8 பருவங்கள் மாற்றப்பட்டுள்ளன. மேலும் இது குறித்த விவரங்களுக்கு 0422-2590080, 9486977757 என்ற எண்களைத் தொடர்பு கொள்ளலாம்'' எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ADMK General Meeting: ஓபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கை ஒத்திவைத்த உயர் நீதிமன்றம்!