சென்னை:உயர் நீதிமன்ற உத்தரவை மீறும் பள்ளிகள் மீதான புகார்களை அறிந்துகொள்ள தனி மின்னஞ்சல் முகவரியை ஆரம்பிக்குமாறு மாவட்ட முதன்மைக் கல்வி இயக்குநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உயர் நீதிமன்ற உத்தரவையும் மீறி 100 விழுக்காடு கட்டணம் செலுத்த வேண்டும் என பெற்றோர்களிடம் வலியுறுத்தியதாக 20க்கும் மேற்பட்ட பள்ளிகள் மீது புகார்கள் வந்துள்ளதாகவும், மேலும் 100 விழுக்காடு பள்ளி கட்டணம் செலுத்த சொல்லி பெற்றோர்களை கட்டாயப்படுத்தும் பள்ளிகள் மீதான புகார்களை அளிப்பதற்கு என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பிரத்யேகமாக மின்னஞ்சல் முகவரிகளை ஆரம்பித்து பெற்றோர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
மெட்ரிக் பள்ளிகளின் இயக்குநர் கருப்பசாமி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், சென்னை உயர் நீதிமன்றம் ஜூலை 17ஆம் தேதி வழங்கிய தீர்ப்பை மீறி 100 விழுக்காடு கட்டணம் செலுத்த வேண்டும் என கேட்கும் பள்ளிகள் மீது பெற்றோர்கள் அளிக்கும் வாய்மொழி, எழுத்துப்பூர்வமான புகார்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் விசாரணை செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டது.
மேலும், முழு கல்விக் கட்டணம் செலுத்த சொல்லி நிர்பந்திக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுப்பதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சரியாக செயல்படவில்லை என்று நீதிமன்றம் விமர்சித்து உள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். ஒவ்வொரு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரும், நீதிமன்ற உத்தரவை மீறி 100 விழுக்காடு கட்டணம் செலுத்த வேண்டும் என கட்டாயப்படுத்தும் பள்ளிகள் குறித்த புகாரை பெறுவதற்கு பிரத்யேகமாக ஒரு மின்னஞ்சல் முகவரியை ஆரம்பித்து அதை பெற்றோர்கள், பொதுமக்கள் அறியும் வைகயில் தெரிவிக்க வேண்டும்.
இது போன்று பெறப்படும் புகார்கள் மீது உடனடியாக விசாரணையும் மேற்கொள்ள வேண்டும். அதன் உண்மைத்தன்மையை ஆராய்ந்து முதன்மைக் கல்வி அலுவலரே பள்ளிகளுக்கு நோட்டீஸ் அளித்து, விளக்கம் கேட்க வேண்டும். அதற்கு பள்ளி நிர்வாகம் அளித்த விளக்கம் ஆகியவற்றுடன் தனியார் பள்ளிகள் குறித்து மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்கத்திற்கு அனுப்ப வேண்டும்.
இவ்வேளையில் கல்விக் கட்டணம் தொடர்பான வழக்கு செப்டம்பர் 7ஆம் தேதி விசாரனைக்கு வரவுள்ளதால், தனியார் பள்ளிகள் மீது பெற்றோர்கள் அளிக்கும் புகார்களை நாளைக்குள் (செப்.,3) மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் சங்கத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவில் மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் தெரிவித்துள்ளார்.