சென்னை: தமிழ் சினிமாவின் வசூல் மன்னன் என்று அழைக்கப்படுபவர், நடிகர் விஜய். இவரை வைத்து படம் தயாரிக்கவும் இயக்கவும் பலர் போட்டியிட்டு வருகின்றனர். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ”லியோ” என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு அக்டோபர் மாதம் ’’லியோ’’ திரைப்படம் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் நடிகர் விஜய் ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்கனவே ”பிகில்” என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது நடிகர் விஜய் தனது 68ஆவது படத்தை ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்க உள்ளார். இதன் அறிவிப்பு இன்று (மே 21) வெளியாகியுள்ளது. இப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்காலிகமாக இப்படத்திற்கு தளபதி 68 என்று பெயரிடப்பட்டுள்ளது. வெங்கட் பிரபு படங்கள் என்றாலே அதில் சுவாரஸ்யமான கதை சொல்லும் முறை இருக்கும். நிறைய புதுமையான காட்சிகள் இருக்கும். மாஸாகவும் இருக்கும். இவர் இம்முறை விஜய்யுடன் இணைந்துள்ளது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் அஜித்தை வைத்து இயக்கிய ’’மங்காத்தா’’ திரைப்படம் இன்றுவரை கிளாசிக் மாஸ் படமாக பார்க்கப்படுகிறது. அதேபோன்று நடிகர் சிம்பு நடிப்பில் இவர் இயக்கிய ’’மாநாடு’’ திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டடித்தது. அதுமட்டுமின்றி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க உள்ளார். இதுவும் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.