தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தலைப்பு திருட்டு சர்ச்சையில் விக்னேஷ் சிவன் - நடந்தது என்ன? - director SS Kumaran allegation

vignesh shivan: இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் எல்ஐசி திரைப்படத்தின் பூஜை நிகழ்ச்சியில் பட தலைப்பு வெளியிடப்பட்ட நிலையில், படத்தலைப்பு திருடப்பட்டுள்ளதாக இயக்குநர் எஸ்.எஸ்.குமரன் குற்றம் சாட்டியுள்ளார்.

தலைப்பு திருட்டு சர்ச்சையில் விக்னேஷ் சிவன்
தலைப்பு திருட்டு சர்ச்சையில் விக்னேஷ் சிவன்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 15, 2023, 3:39 PM IST

சென்னை: இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் டுடே பட கதாநாயகனும் இயக்குநருமான பிரதீப் ரங்கநாதன் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்திற்கு எல்ஐசி(லவ் இன்சூரன்ஸ் கார்பரேஷன்) என்று பெயர் வெளியிடப்பட்ட நிலையில், படத்திற்கான பூஜை நேற்று(டிச.14) நடைபெற்றது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் குமார் தயாரிப்பில் உருவாகும் இந்தப்படத்தில் கீர்த்தி ஷெட்டி, யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கவிருக்கின்றனர்.

இந்த நிலையில் படத்தின் தலைப்பு நேற்று(டிச.14) அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் தலைப்பு திருடப்பட்டுள்ளதாக இசை அமைப்பாளரும் இயக்குநருமான எஸ்.எஸ்.குமரன் புகார் அளித்துள்ளார். இயக்குநர் எஸ்.எஸ்.குமரன் பூ படத்தின் மூலம் இசை அமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து களவாணி உள்ளிட்ட சில படங்களுக்கு இசை அமைத்துள்ளார். இதைத்தொடர்ந்து, தேநீர் விடுதி, கேரள நாட்டிளம் பெண்களுடனே ஆகிய படங்களை இயக்கி இயக்குநராக அறிமுகமானார்.

இந்த நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கவிருக்கும் படத்தலைப்பு வெளியிடப்பட்டதையடுத்து, படத்தின் தலைப்பு என்னுடையது என்று போர்க் கொடி தூக்கியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மதிப்பிற்குரிய பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கு வணக்கம். விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்திற்கு L I C என்று பெயரிட்டு இருப்பதைக்கண்டு அதிர்ச்சியும் மன உளைச்சலும் அடைந்தேன். காரணம் LIC என்கின்ற பெயரை 2015 ஆம் ஆண்டே என் தயாரிப்பு நிறுவனமான SUMA pictures-யின் வாயிலாக பதிவு செய்து வைத்திருக்கிறேன்.

இதை அறிந்த விக்னேஷ் சிவன் அவருடைய புதிய படத்திற்கு அந்தப்பெயரை தரக்கோரி தனது மேலாளர் மயில்வாகனன் மூலம் என்னை அணுகினார். ஆனால் LIC என்கின்ற தலைப்பு நான் இயக்கும் படத்திற்கு மிகச்சரியாக பொருந்துவதாலும், கதையின் பலமே அந்த தலைப்பை ஒட்டி அமைந்திருப்பதாலும் நான் அதனை மறுத்துவிட்டேன். ஆக இந்த தலைப்பை நான் முறைப்படி பதிவு செய்து வைத்திருக்கிறேன் என்பதை விக்னேஷ் சிவன் நன்றாக அறிவார். அப்படி இருந்தும் இந்த தலைப்பை அவர் அவரது படத்திற்கு வைக்கிறார் என்று சொன்னால் அது சட்டத்திற்கு புறம்பானது மட்டுமல்ல, எளிய, சிறிய தயாரிப்பாளர்களை நசுக்கும் செயலாகும்.

இச்செயல் முழுக்க முழுக்க அதிகாரதன்மை கொண்டது. அவரின் இந்த செயலுக்கு நியாயம் கேட்டு ஊடகத்திற்கு முன் நிற்கிறேன். LIC என்கிற தலைப்பு என்னிடம் மட்டுமே இருப்பதால், அதை விக்னேஷ் சிவன் அவரது படத்தில் எந்த விதத்திலும் பயன்படுத்தக்கூடாது என்று இதன் மூலம் தெரியப்படுத்த விரும்புகிறேன். இனியும் இச்செயலை விக்னேஷ் சிவன் தொடர்வார் என்றால் சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுப்பேன் என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே அஜித் படம் கைவிட்டு போன நிலையில் தற்போது இந்த படமும் தொடங்கும் முன்பே சர்ச்சையில் சிக்கியுள்ளது விக்னேஷ் சிவனுக்கு மற்றுமொரு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:விக்னேஷ் சிவன் - ப்ரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகும் LIC படப்பிடிப்பு தொடக்கம்!

ABOUT THE AUTHOR

...view details