சென்னை: ஸ்ரீனி சௌந்தர்ராஜன் தயாரித்து இயக்கியுள்ள 'கபில் ரிட்டர்ன்ஸ்' என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் சுப. வீரபாண்டியன், பேரரசு, ஆர்வி உதயகுமார், சினேகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து பேசிய இயக்குனர் பேரரசு,"சினிமாவை கார்ப்பரேட் கம்பெனிகள் தான் இயக்கி வருகிறது. நானும் அதில் பாதிக்கப்பட்டவன். கடவுளை நம்பிக்கையுள்ள நானும், கடவுள் நம்பிக்கையற்ற சுப. வீரபாண்டியனும் ஒரே மேடையில் உள்ளோம். அவர் மனதிலும் கடவுள் உள்ளார். நல்ல மனதுதான் அது. நல்ல மனது உள்ள அனைவருமே கடவுள்தான்" என்றார்.
இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசுகையில், "தமிழ்நாட்டில் மிகப்பெரிய சம்பவம் ஒன்று நடந்தது. விஜய் ஆண்டனி மகள் தற்கொலை செய்து கொண்டார். இதை கேட்கும் போது மனம் வலிக்கிறது. அப்படி ஒரு பெரிய சம்பவம் நடக்கிறது. யூடியூப்பில் தலைப்பு ரொம்ப கொடூரமாக வைக்கிறார்கள். விஜய் ஆண்டனி கைது என்று போடுகிறார்கள். எப்படி ஒரு மோசமான செயல். ரொம்ப வலிக்கிறது.
விஜய் ஆண்டனி பாவம், அவர் ஏற்கனவே சோகத்தில் இருக்கிறார். அவரை கைது என்று போடுகிறார்கள். சினிமா ஊடகங்கள் எல்லாம் சரியா தான் இருக்கிறது. நடுவில் வந்த யூடியூப் தான் ரொம்ப மோசமாக செய்கிறார்கள். தவறான டைட்டில் வைப்பது விபசாரத்துக்கு சமம். இவர்களை நல்ல ஊடகங்கள் எதிர்க்க வேண்டும் என்றார். மேலும் நாமே நம் தமிழை கொன்று வருகிறோம்.
பேன் இந்தியா படம் என்பதற்காக தலைப்பை ஆங்கிலத்தில் வைக்கிறார்கள். அது ஜெயிலராக இருக்கட்டும். எதுவாக இருந்தாலும் இருக்கட்டும். ஜெயிலருக்கு பதில் சிறை காவலன் என்று வைக்கலாமே? தமிழில் வைக்க கற்றுக் கொள்ளுங்கள். நாம் தான் நம் தமிழை காப்பாற்ற வேண்டும். படத்தில் பாடல்கள் எழுதும் பொழுது ஆங்கிலத்தில் கசமுசா என்று எழுதாதீர்கள். தமிழில் நல்ல பாடல்களை எழுதுங்கள். இப்போது உள்ள குழந்தைகளுக்கு ஆங்கிலம் எது தமிழ் எது என்று தெரியவில்லை" என்று பேசினார்.