சென்னை:அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி சர்வதேச ஊழல் தடுப்பு மையம் மற்றும் மனித உரிமை ஆணையம் என்ற அமைப்பின் சார்பில் சினிமா பிரபலங்களுக்கு 'கவுரவ டாக்டர் பட்டம்' மற்றும் விருது வழங்கப்பட்டது. இந்த பட்டங்கள் அனைத்தும் போலியானவை என தெரிய வந்ததைத் தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழகம் அளித்த புகாரின் அடிப்படையில் பட்டங்களை வழங்கிய ஹரிஷ் மற்றும் அவருடைய கூட்டாளி மகராஜன் (எ) குட்டி ராஜா என்பவரை கோட்டூர்புரம் போலீசார் ஆம்பூர் அருகே வைத்து கைது செய்தனர்.
ஹரீஷிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இவர் கடந்த 2020ஆம் ஆண்டு சென்னை பல்லாவரத்தில் உள்ள பிரபலமான கல்லூரியில் பி.டெக் பொறியியல் படிப்பை படித்து முடித்து இருக்கிறார். கல்லூரி காலங்களில், திறமையான பேச்சாளராக இருந்து வந்திருக்கிறார். ஒரே நேரத்தில் 108 தலைப்புகளில் மாற்றி மாற்றி வேகமாக பேசக்கூடிய பேச்சாற்றலும் பெற்றிருக்கிறார். இதற்காக இவருக்கு தனியார் நிறுவனம் ஒன்று சிறந்த பேச்சாளருக்கான பட்டத்தை வழங்கி இருக்கிறது.
இந்த நிகழ்வு தான், இவருக்கு நாமும் ஏன் பட்டங்களை வழங்கக்கூடாது? என்ற ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியிருக்கிறது. உடனடியாக சர்வதேச ஊழல் தடுப்பு மையம் மற்றும் மனித உரிமை ஆணையம் என்ற அமைப்பை முறைப்படி பதிவு செய்து அனுமதி பெற்று இருக்கிறார். சென்னை எம்ஜிஆர் நகரில் சிறிய அறையில் அலுவலகத்தையும் ஆரம்பித்து செயல்பட்டு இருக்கிறார்.
இதன் பின்னர் சென்னையைச் சேர்ந்த பிரபல தனியார் தொலைக்காட்சியில் பிஆர்ஒ-ஆக வேலைப் பார்த்து வருதாகக் கூறிய குட்டி ராஜா என்ற மகாராஜனுடன் இவருக்கு தொடர்பு ஏற்பட்டு உள்ளது. அவர் மூலமாக, சினிமா பிரபலங்களை ஹரிஷ் தொடர்பு கொள்ள தொடங்கி இருக்கிறார்.
இப்படியாக ஆரம்பத்தில் சினிமாவில் சிறிய ரோல்களில் நடிக்கக் கூடிய நடிகர்களை அழைத்து வந்து பட்டங்களை வழங்கி இருக்கிறார். அவர்களோடு சேர்த்து பலருக்கும் இந்த பட்டங்களை வழங்கி வந்திருக்கிறார். கடந்த 2021ஆம் ஆண்டு கோயம்பேடு வளசரவாக்கம் என இரண்டு இடங்களில் இதே போன்று, இரண்டு கவுரவ டாக்டர் பட்டங்களை வழங்கும் நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார். அதேபோன்று கடந்த 2022ஆம் ஆண்டும் இதே போன்று இரண்டு டாக்டர் பட்டங்களை வழங்கும் நிகழ்ச்சியை நடத்தி முடித்து இருக்கிறார்.
சினிமா பிரபலங்களுக்கு பட்டங்களை இலவசமாகவே வழங்கி வந்திருக்கிறார். அதே நேரத்தில், பிற நபர்களுக்கு டாக்டர் பட்டங்கள் ஆசையைக் காட்டி, ஒரு பட்டத்திற்கு 15 ஆயிரத்திலிருந்து அதிகபட்சமாக 25 ஆயிரம் ரூபாய் வரை வசூல் செய்திருக்கிறார். பின்னர் பணம் வழங்கியவர்களுக்கு இந்த பட்டத்தையும் தயார் செய்து கொடுத்திருக்கிறார்.