சென்னை: ரட்சகன், ஸ்டார், ஜோடி உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பிரவீன் காந்தி. இவர் சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று (செப்டம்பர்.1) புகார் ஒன்றை அளித்தார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “நாய்க்கும், மனிதருக்குமான உறவை மையப்படுத்தி படம் ஒன்றை இயக்க உள்ளேன். அதற்காக விக்கிப்பீடியாவில் இந்தியன் நாய் என தேடியபோது பட்டியலினத்தோரை ஒப்பிட்டு இழிவுப்படுத்தும் வகையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.
இதனை தொடர்ந்து ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியில் பட்டியலினத்தோர் குறித்து தேடியபோது தீண்டத்தகாதவர் என குறிப்பிட்டிருந்தது.
உடனடியாக நீக்க வேண்டும்
ஆங்கிலேயர் ஆட்சி புரிந்தபோது இந்தியாவில் நாட்டு நாய் வியாபாரம் ஆகக்கூடாதென எண்ணி பட்டியலினத்தோரின் பெயரை வைத்து அழைத்தது இன்றும் விக்கிப்பீடியா மூலமாக நீடிக்கிறது.
ஆங்கிலேயர்கள் இந்தியர்களை இன்னும் அடிமைத்தனமாகவே வைத்திருக்கிறார்கள். இது இந்தியர்களின் வளர்ச்சியை சீர்குலைக்கும் வகையில் இருக்கும்.
இதனால் விக்கிப்பீடியா மற்றும் ஆங்கில ஆக்ஸ்போர்டு அகராதியில் உள்ள இந்த பதிவை உடனடியாக நீக்க வேண்டும் என ஆதாரத்துடன் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளேன். மேலும் இது குறித்து முதலமைச்சர் தனிப்பிரிவு, நீதிமன்றத்தை நாடவும் திட்டமிட்டுள்ளேன்” என கூறினார்.
இதையும் படிங்க: ஜி.பி. முத்து மீது புகார் - ஆபாச பேச்சால் சர்ச்சை