தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உடன் திரைப்பட இயக்குநர் பேரரசு மற்றும் இசையமைப்பாளர் தீனா ஆகியோர் ஆலோசனை நடத்தினர் சென்னை: தமிழ் சினிமாவின் கமர்ஷியல் இயக்குநர்களில் ஒருவரான இயக்குநர் பேரரசு, தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத்தில் பொறுப்பு வகித்து வருகிறார். இதனிடையே, கடந்த 2020ஆம் ஆண்டு தன்னை பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துக் கொண்டார். இதன் பிறகு, பாஜகவின் கூட்டங்கள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளில் பேரரசு பேசி வந்தார்.
அவ்வாறு பேசும்போது பல்வேறு வகையான சர்ச்சைகளிலும் பேசி உள்ளார். அதே போன்று இசையமைப்பாளர் தீனாவும் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அது மட்டுமல்லாமல், இயக்குநர் பேரரசுக்கு பாஜகவில் தமிழ்நாடு மாநில கலை மற்றும் கலாச்சாரப் பிரிவு கௌரவத் தலைவராக பொறுப்பு கொடுக்கப்பட்டது.
மேலும், தற்போது வெளிநாடு, அண்டை மாநில தமிழ் வளர்ச்சி மற்றும் மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாநிலத் துணைத் தலைவராக பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில், இயக்குநர் பேரரசு மற்றும் இசையமைப்பாளர் தீனா ஆகிய இருவரும், இன்று (மே 31) தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசி உள்ளனர்.
அப்போது, இயக்குநர் பேரரசுவின் படங்கள் பற்றியும், மற்ற விஷயங்கள் பற்றியும் பேசி உள்ளனர். அதேநேரம், பேரரசு படங்களில் சண்டைக் காட்சிகள் நன்றாக இருக்கும் என அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி மக்கள் அதிகாரம் ஸ்டைலில் அண்ணாமலை பற்றி பாடல் எழுதி இசை அமைக்க உள்ளதாக பேரரசு மற்றும் தீனா ஆகிய இருவரும் அண்ணாமலையிடம் தெரிவித்து உள்ளனர்.
மக்கள் அதிகாரத்தினர் அரசியல் கட்சிகள் மற்றும் ஆளும் கட்சியினரின் செயல்பாடுகள் மற்றும் தமிழ்நாட்டில் நடந்து வரும் அவலங்கள் பற்றி பாடல்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதேபோன்று அண்ணாமலையின் செயல்பாடுகள் குறித்து நல்ல விதமாக அவரை பெருமைப்படுத்தும் விதமாக பாடல் ஒன்றை தயாரிக்க முடிவு செய்துள்ளனர்.
இது குறித்தும் அண்ணாமலை, பேரரசு மற்றும் இசையமைப்பாளர் தீனாவிடம் ஆலோசனை நடத்தி உள்ளார். முன்னதாக லைசென்ஸ் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் பேரரசு, “ஒரு ஆசிரியர் துப்பாக்கிக்கான உரிமம் வேண்டும் என்று எதற்காக கேட்கிறார் என்பதுதான் இந்தப் படத்தின் கதை.
இன்றைக்கு சூழல் அப்படித்தான் இருக்கிறது. இன்றைய கால கட்டத்தில் வாழ்கின்ற மாணவர்களும் ஒழுங்கீனமாக, சுயமரியாதை இல்லாமல் அஜாக்கிரதையாக நடந்து கொள்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அனைத்து ஆசிரியர்களின் கைகளிலும் பிரம்பு இருந்தது. அந்த பிரம்பு கீழே விழுந்ததும் மாணவர்களிடம் இருந்த ஒழுக்கமும் போய்விட்டது.
எனவே ஆசிரியர்கள் கையில் இனி பிரம்பைக் கொடுக்க வேண்டும்” என கூறினார் என்பதும், இது தற்போது சர்ச்சை மிகுந்த பேச்சாக கவனிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:சாலை வசதி இல்லாததால் பறிபோன குழந்தையின் உயிர்: வேலூர் அருகே கண்கலங்க வைக்கும் சம்பவம்!