சென்னை:இந்திய பசுமை ஆணையம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு இடையிலான போட்டிகளுக்கு விருது வழங்கும் (Plant Your Talent) நிகழ்ச்சி சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளரும், இயக்குநருமான ரத்ன குமார், இயக்குநர் பேரரசு, நடிகர் ராஜேஷ், பாடலாசிரியர் சினேகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தடை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவைக் கொண்டாட காவல்துறை அனுமதி மறுத்தது தொடர்பாக பேசிய இயக்குநர் பேரரசு, "இதுவரை லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு தடை என்று செய்தி வரவில்லை.
படக்குழு நிறுத்தி விட்டார்கள். அரசு தடை விதித்தது என்றால், அரசை சொல்லலாம். நாம் யூகத்தில் எதையும் பேசி பிரச்சினையை உண்டாக்கக் கூடாது. என்னைப் பொறுத்தவரை, லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்திருந்தால் கூட இவ்வளவு பப்ளிசிட்டி ஆகியிருக்காது" என்று கூறினார்.
அதனைத் தொடர்ந்து கர்நாடகாவில் சித்தா படத்தின் நிகழ்ச்சிக்குச் சென்ற நடிகர் சித்தார்த்தை காவிரி விவகாரத்தைக் காரணம் காட்டி வெளியேற்றியது குறித்த கேள்விக்கு, "நாம் கேட்கும் இடத்தில் இருக்கிறோம். அவர்கள் கொடுக்கும் இடத்தில் இருக்கிறார்கள். அப்படியிருக்க, அவர்கள் வேகத்துக்கும், நம் வேகத்துக்கும் வித்தியாசம் உண்டு. நமக்கு காரியம் ஆக வேண்டும். அவர்கள் கொடுக்க மாட்டோம் என்று கோபப்படுவார்கள். சீண்டிப் பார்ப்பார்கள். பதிலுக்கு நாமும் சீண்டினால் உள்ளதும் கெட்டுப்போய் விடும்" என்றார்.
திரைத்துறை பிரபலங்கள் சார்பில் ஏன் கண்டன குரல்கள் எழுப்பவில்லை என்ற கேள்விக்கு, "சீமான் பதில் கொடுத்தார். நானும் இது குறித்துப் பேசி இருக்கிறேன். எதற்கெடுத்தாலும் ஏன் நடிகர்களை இழுக்கிறீர்கள்? இதற்கு அரசாங்கம் என்ன சொல்கிறது? அமைச்சர்கள் என்ன சொல்கிறார்கள்? யாருக்கு ஓட்டுப் போட்டோம்? அரசாங்கம்தான் இதற்கு பொறுப்பு. சித்தார்த் நடிகர் என்றால், இதற்கு நடிகர் சங்கம் பொறுப்பல்ல. சித்தார்த் என்ற நடிகருக்கும் அரசுதான் பொறுப்பு. நடிகர் ஒருத்தர் குரல் கொடுத்தால் பிரச்சினை இன்னும் அதிகமாகும், பிறகு பாதிப்பு நமக்குத் தான்.
நீதிமன்றத்தின் அடுத்த கட்டம் என்ன? நீங்கள் சொல்லியும் தண்ணீர் தரவில்லை. அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள்? அதைக் கேளுங்கள். அதை விட்டுவிட்டு ரஜினி என்ன சொல்லப் போகிறார்? விஜய் என்ன சொல்லப் போகிறார்? என்பது கேள்வி அல்ல" என்றார்.
காவிரி நதிநீர் விவகாரத்தில் திரைத்துறையினருக்குப் பொறுப்பு இல்லையா என்ற கேள்விக்கு, "முதலமைச்சருக்கு பொறுப்பு கிடையாதா? உதயநிதிக்கு பொறுப்பு கிடையாதா? சினிமாக்காரர்களுக்கு பொறுப்பு இருக்கிறது. ஆனால் முதலமைச்சர், அமைச்சர்கள் எல்லாம் பேச வேண்டும். கண்டனம் சொல்ல வேண்டும்.
அங்குக் காங்கிரஸ் ஜெயிக்க வேண்டும் என்று யார் ஓட்டுப் போட்டது? இங்கு அவர்களுடன் கூட்டணியில் இருப்பவர்களை விட்டு விடுகிறீர்கள். ஆனால் சினிமாக்காரர்களை பேசவில்லை என்றால், யார் பேச வேண்டுமோ அவர்கள் பேச வேண்டும். சினிமாவில் வசனம் பேசியவரிடம் கேட்கும் நீங்கள், ஓட்டுப் போட்டு பதவியில் உட்கார வைத்தவர்களிடம் கேட்பதில்லை" என்று கூறினார்.
இதையும் படிங்க:சூடு பிடிக்க தொடங்கிய ‘மார்க் ஆண்டனி’ விவகாரம் - மும்பை சென்சார் போர்டு மீது சிபிஐ விசாரணை!